Published:Updated:

``நாங்களும் மனிதர்கள்தான்... எங்களுக்கும் உதவுங்கள் ஆட்சியாளர்களே..!” - திருநர்களின் துயரக்குரல்

கொரோனா காலத்தில் திருநர்கள்
கொரோனா காலத்தில் திருநர்கள் ( படம்: ஐஷ்வர்யா )

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் மத்திய சமூகநலத்துறையின் கீழ் இயங்கும் தேசிய சமூகப் பாதுகாப்புக் கழகம் மட்டும் திருநங்கைகளுக்கான நிவாரணத் தொகையாக 1500 ரூபாயை அறிவித்திருந்தது. ஆனால்...

4.88 லட்சம்
தேசிய சென்ஸஸ் பதிவு 2011ன் படி இந்தியாவில் திருநர்கள் எண்ணிக்கை

தேசிய சென்ஸஸ் பதிவு 2011-ன் படி, இந்தியாவில் மொத்தம் 4.88 லட்சம் திருநர்கள் இருக்கிறார்கள். இந்த ஒன்பது வருட காலத்தில் அந்த எண்ணிக்கை நிச்சயம் அதிகரித்திருக்கக்கூடும். ஆனால், பதிவு செய்தவர்களில் வெறும் 4,000 பேருக்கு மட்டுமே இந்த உதவித்தொகை சென்று சேர்ந்திருக்கிறது. இது ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 1 சதவிகிதத்துக்கும் குறைவு.

கொரோனா நோய்த்தொற்றல் காரணமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நிலை ஒடுக்கப்பட்ட மக்களை மிகவும் பாதித்திருக்கிறது என்றாலும், அதினிலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் திருநர்கள். அரசு பல திட்டங்களை இந்தப் பேரிடர் காலத்தில் அறிவித்தாலும் அதை அனைவருக்குமான திட்டமாக அறிவிக்கவில்லை என்பதுதான் தற்போது திருநர் செயற்பாட்டாளர்கள் முன்வைத்துவரும் புகார். நாடுமுழுவதும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட திருநர்கள் தற்போது இதற்காக அரசிடம் முறையிட்டுள்ளார்கள்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் மத்திய சமூகநலத்துறையின் கீழ் இயங்கும் தேசிய சமூகப் பாதுகாப்புக் கழகம் மட்டும் திருநங்கைகளுக்கான நிவாரணத் தொகையாக 1,500 ரூபாயை அறிவித்திருந்தது. அந்தத் தொகையைப் பெற ஆன்லைனில் பதிவுசெய்யச் சொல்லியிருந்தது.

கொரோனா பாதிப்பும் அரசு கைவிட்ட நிலையும் திருநர்களைப் பலவருடங்கள் பின்னோக்கித் தள்ளும்
கிரேஸ் பானு
கிரேஸ் பானு

``திருநங்கைகளில் சிலருக்கு மட்டுமே ஆதார் கார்டுகள் இருக்கின்றன. ஆனால், எவருக்குமே ரேஷன் அட்டைகள் கிடையாது. பல பேரிடம் வங்கிக் கணக்குகள் எதுவுமே கிடையாது. திருநர் அடையாள அட்டை மட்டும்தான் நாங்கள் இந்த நாட்டு மக்கள் என்பதற்காக எங்களிடம் இருக்கும் ஒரே ஆதாரம். அதுவும் இந்தக் குறுகிய காலத்தில் வீட்டை விட்டு வெளியேறிய திருநர்களிடம் இந்த அடையாள அட்டைக்கூட இருக்காது. வீடே இல்லாமல் தவிக்கும் திருநர்களும் இருக்கிறார்கள். இத்தனை பேருக்கும் நிவாரணத் தொகையைச் சென்று சேர்க்க அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை ” என்று ஆதங்கத்துடன் பேசுகிறார் சமூக செயற்பாட்டாளர் கிரேஸ் பானு.

திருநர்கள், இந்தச் சமூகத்தின் மிக முக்கியப் பொறுப்புகளில் அங்கம் வகிக்கும் ஆரோக்கியமான சூழல் அண்மைக்காலமாகத்தான் அதிகரித்து வருகிறது. பிச்சை எடுப்பது, பாலியல் தொழில் என்கிற அடையாளத்தை உடைத்துச் சிலர் தற்போதுதான் சுயதொழில் முனைவோர்களாக உருவாகி வருகிறார்கள். சில பகுதிகளில் திருநர்கள் ஒன்றிணைந்து நிவாரணம் போகாத பகுதிகளில் தாங்களே எப்படியோ முயற்சி செய்து நிவாரணங்களை அளித்து வருகிறார்கள். இந்தக் கொரோனா சூழல் சமுதாயத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக்கியிருக்கிறது.

``எங்கிருந்தோ எப்படியோ அரிசி பருப்பெல்லாம் திரட்டி இல்லாதவங்களுக்குக் கொடுக்கறோம். இப்போ லாக்டெளன் காலத்தை நீட்டிச்சிருக்காங்க. அவங்களுக்கு இரண்டாவது கட்டமாக உதவிகள் தேவைப்படுது. முதல்முறை எப்படியோ உதவிட்டோம். ஆனா, இரண்டாவது முறை எங்களுக்கே உணவில்லாத சூழல்தான் ஏற்பட்டிருக்கு” என்கிறார் திருநர் ஒருவர். கொரோனா பாதிப்பும் அரசு கைவிட்ட நிலையும் திருநர்களைப் பலவருடங்கள் பின்னோக்கித் தள்ளும் ஆபத்தை உருவாக்கி வைத்திருக்கிறது.

கொரோனா காலத்தில் திருநர்கள்
கொரோனா காலத்தில் திருநர்கள்

இத்தனைக்கும் நால்ஸா மற்றும் இந்திய யூனியன் வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் `தகுந்த ஆதாரங்கள் இல்லை என்பதற்காக அவர்களுக்கான (திருநர்கள்) உரிமைகள் மற்றும் சலுகைகளை நிராகரிக்கக் கூடாது’ எனக் குறிப்பிட்டிருந்தது. தற்போதைக்குக் கேரளா மட்டுமே திருநர்களுக்கான நிவாரண மற்றும் உதவிப் பொருள்களை வழங்கிவருகிறது.

இந்தச் சவாலைச் சீர்செய்யதான் தற்போது செயற்பாட்டாளர்கள் அரசிடம் அழுத்தமாகக் கோரிக்கை வைத்துள்ளார்கள். லாக்டெளன் நீட்டிக்கப்பட்டுள்ளதால் நிவாரணத் தொகையை 3000 ரூபாயாக அதிகரித்தும், உணவுத் தேவைக்கான பொருள்களை அனைவருக்கும் சென்று சேர்க்கும் வகையில் பணிகளைத் துரிதப்படுத்தவும் கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

கொரோனா காலத்தில் திருநர்கள்
கொரோனா காலத்தில் திருநர்கள்
படம்: ஐஷ்வர்யா

இந்த நெருக்கடி ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம் திருநர் பாதுக்காப்புச் சட்டத்துக்கான சட்டவரையறையை இந்த லாக்டெளன் காலத்தில் முடிப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது மத்திய அரசு. சட்டம் குறித்தான கருத்துக் கேட்கும் தேதி 30 மே 2020-ல் முடிவடைகிறது. 2014-ல் வெளியான உச்சநீதிமன்ற நால்ஸா தீர்ப்புக்கு எதிராக இது இருக்கிறது என, இந்தச் சட்டத்துக்கு எதிராகத் திருநர்கள் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா பேரிடர் காலத்தில் அவசர அவசரமாகச் சட்ட வரையறையை முடிவு செய்யக் கூடாது எனவும் திருநர் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்திவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு