Published:Updated:

`கொரோனாவைத் தடுக்க வேப்பிலை.. மஞ்சள்..!’ -அரசுப் பேருந்தை வைரலாக்கிய கோவை கிராம மக்கள்

அரசுப் பேருந்து வேப்பிலை
அரசுப் பேருந்து வேப்பிலை

கொரோனா வைரஸ் காரணமாக கோவையில் அரசுப் பேருந்துக்கு வேப்பிலை, துளசி கட்டி இயக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் நாளை ஊரடங்கு உத்தரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை தமிழகத்தில் ஆறு பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திரும்பிய பக்கமெல்லாம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அரசுப் பேருந்து வேப்பிலை
அரசுப் பேருந்து வேப்பிலை

முக்கியமாக கோவை கேரள எல்லையில் இருப்பதால், கடந்த சில வாரங்களாகவே அங்கு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கியமாக, மத்வராயபுரம், நாதகவுண்டபுதூர் உள்ளிட்ட கிராமங்களில் வீடுகளில் வேப்பிலை கட்டி, சாணி தெளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கோவையில் பல ஊராட்சிகளில் ஆங்காங்கே வேப்பிலைத் தடுப்புமுறை கையில் எடுக்கப்பட்டது.

அரசுப் பேருந்து வேப்பிலை
அரசுப் பேருந்து வேப்பிலை

இந்நிலையில், காந்திரபுரம் டு நாதகவுண்டன்புதூர் அரசுப் பேருந்தில் (எண் 14 ) வேப்பிலை, துளசி கட்டி இயங்குவதைப் பார்த்து கோவை மாநகர மக்கள் ஆச்சர்யமடைந்தனர். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகின்றன.

அரசுப் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் இப்படி செய்ததாகத் தகவல்கள் பரவின. ஆனால், இந்த வேலையைச் செய்திருப்பது நாதகவுண்டன்புதூர் கிராம மக்கள்தானாம். கொரோனாவிலிருந்து தப்பிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக வேப்பிலை, துளசி கட்டி, மஞ்சள் தூள் தூவி, சிறப்பு பூஜை செய்து அந்தப் பேருந்தை அனுப்பி வைத்துள்ளனர் நாதகவுண்டன்புதூர் கிராம மக்கள்.

அரசுப் பேருந்து மஞ்சள்
அரசுப் பேருந்து மஞ்சள்

ஒருபுறம் இதை நெட்டிசன்கள் கலாய்த்தாலும், மறுபுறம், வேப்பிலை, மஞ்சள் என்று பாரம்பர்யத்துக்குத் திரும்புகிறது என்று பாராட்டுகளும் குவிகின்றன. எது எப்படியோ... கொரோனாவிலிருந்து விழிப்பாக இருக்க வேண்டும் என்ற மக்களின் எண்ணம் நிச்சயம் வரவேற்கத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு