Published:Updated:

``அருகில் வந்தால் கட்டிப்பிடிப்பேன்"-போலீஸை மிரட்டிய சென்னை ஜி ஹெச்-சிலிருந்து தப்பிய கொரோனா நோயாளி

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து தப்பிய கொரேனாவால் பாதிக்கப்பட்ட நபரால், போலீஸாரும் சுகாதார பணியாளர்களும் சொல்லமுடியாத துயரத்துக்குத் தள்ளப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவப்பணியாளர்கள், சுகாதாரத் துறையினர், காவல்துறையினர் பணியாற்றிவருகின்றனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நபரின் செயல் அனைவரையும் முகம் சுளிக்கவைத்துள்ளது.

`எங்கள் நலனே அவளுக்கு முக்கியம்!’ -கொரோனா பணியில் இருந்த மருத்துவரின் தற்கொலையால் கலங்கும் நிர்வாகம்
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த புளியந்தோப்பைச் சேர்ந்தவருக்கு இரவு உணவு வழங்க ஊழியர்கள் சென்றனர். அப்போது படுக்கையில் அந்த நபர் இல்லை. அதனால் அவரை மருத்துவமனை வளாகத்தில் தேடியும் அவர் எங்கு சென்றார் என்ற தகவலும் தெரியவில்லை.

இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுசெய்தோம். அப்போது, அவர் மருத்துவமனையிலிருந்து வெளியில் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. உடனடியாக மருத்துவமனை உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா
கொரோனா
`கோழிப் பண்ணையில் லேப்டாப்; சீக்ரெட் வீடியோக்கள்!' -எப்படியெல்லாம் ஏமாற்றுவார் இன்ஜினீயர் சுஜி?

போலீஸாரும் அந்த நபரை பல இடங்களில் தேடினர். ஆனால் அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில், புளியந்தோப்பில் உள்ள அவரின் வீட்டை போலீஸார் இன்று காலை ரகசியமாகக் கண்காணித்தனர். மேலும், அவரின் குடும்பத்தினரின் நடவடிக்கைகளையும் போலீஸார் நோட்டமிட்டனர். அப்போது, கொரோனா வார்டிலிருந்து தப்பிய அந்த நபர், வீட்டுக்கு வந்த தகவலை போலீஸார் உறுதிப்படுத்தினர்.

பின்னர் சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவித்த போலீஸார், ஆம்புலன்ஸோடு அங்கு வரும்படி கூறினர். அதன்படி சுகாதாரத் துறையினரும் ஆம்புலன்ஸை வீட்டின் முன் நிறுத்தினர். அதனால், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர், வீட்டுக்குள் இருந்து மொட்டை மாடிக்கு ஓடினார். அவரை போலீஸார் பின்தொடர்ந்து, மருத்துவமனைக்கு வாருங்கள், உங்களால் உங்கள் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. தயவுசெய்து ஆம்புலன்ஸில் வந்து ஏறுங்கள் என்று கூறினர். ஆனால் அந்த நபரோ, `என்னை யாராவது பிடிக்க முயற்சி செய்தால், உங்களைக் கட்டிப்பிடித்து கொரோனா தொற்றைப் பரப்பிவிடுவேன்' எனப் பயமுறுத்தியுள்ளார் .

கொரோனா
கொரோனா

அந்த நபரின் பேச்சு போலீஸாருக்கும் சுகாதாரத் துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக போலீஸார், சுகாதாரத் துறையினருக்கு ஒரு தகவலைக் கூறினர். அடுத்த சில நிமிடங்களில் தனிமனிதக் கவச உடை அங்கு கொண்டு வரப்பட்டது. அதையணிந்த போலீஸார், அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர், அந்த நபரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளோம்" என்றனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டதற்கு, ``கொரோனா வார்டிலிருந்து புளியந்தோப்பை பகுதியைச் சேர்ந்த ஒருவர் தப்பி ஓடிவிட்டார் என்ற தகவல் எங்களுக்கு வந்தது. புளியந்தோப்பு என்று கூறியதால் அந்தக் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நபரின் வீடு அமைந்துள்ள பகுதி பேசின்பாலம் காவல் நிலைய எல்லைக்குள் வந்ததால் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸார், அங்கு சென்று பாதுகாப்புடன் அந்த நபரை மருத்துவமனைக்கு வரும்படி அழைத்தனர்.

காவல்துறை
காவல்துறை
மாதிரி புகைப்படம்

அவரின் குடும்பத்தினரும் எவ்வளவோ அந்த நபரிடம் நிலைமைக் கூறினர். அப்போது அந்த நபர், ''எனக்கு மருத்துவமனையில் தங்கியிருக்க மனமில்லை. அதனால் வீட்டிலேயே என்னை நானே தனிமைப்படுத்திக்கொள்கிறேன்'' என்று கூறினார். அதற்கு போலீஸாரும் சுகாதாரத்துறையினரும் சம்மதிக்கவில்லை. இன்னும் சில தினங்களில் நீங்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிடுவீர்கள் என்று பேசிப்பார்த்தனர். கடைசி வரை அந்த நபர் ஒத்துழைப்பு தரவில்லை. அதனால், வலுகட்டாயமாக அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது" என்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``மருத்துவமனையிலிருந்து தப்பி வந்தவர், இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வார்டு பாயாகப் பணியாற்றிவருகிறார். அவருக்கு வயது 55. கடந்த 24-ம் தேதிதான் கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது. அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நடந்தே வீட்டுக்கு வந்துள்ளார். அந்த நபரின் குடும்பத்தினர் போதிய ஒத்துழைப்பு அளித்தனர். இருப்பினும் அவர்மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது" என்றார்.

இந்தச் சம்பவம், புளியந்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு