Published:Updated:

கோவை: கொரோனா நோயாளி உறவினர்கள், தனியார் மருத்துவமனை ஊழியர்கள் மோதல்!-அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்

மோதல் சிசிடிவி
மோதல் சிசிடிவி

கோவை சுந்தராபுரம் பகுதியில் கொரோனா நோயாளி உறவினர்களும், தனியார் மருத்துவமனை ஊழியர்களும் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பாதிப்பு படிப்படியாகக் குறைந்துவருகிறது. ஆனாலும், தனியார் மருத்துவமனைகளின் கட்டணப் பஞ்சாயத்து ஓயவில்லை. கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி. கடந்த மே மாதம், 24-ம் தேதி அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

கொரோனா
கொரோனா
மும்பை: ஹவுஸிங் சொசைட்டியில் போலி கொரோனா தடுப்பூசி முகாம்; போலீஸ் வழக்கு பதிவு!

இதையடுத்து, சுந்தராபுரம் பகுதியிலுள்ள அபிராமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில நாள்களிலேயே ஆறுச்சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையே, ஒரு மாதத்துக்குப் பிறகு ஆறுச்சாமியின் உறவினர்கள் நேற்று மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். மருத்துவமனை நிர்வாகத்திடம் அவர்கள், சிகிச்சை விவரம் மற்றும் கட்டணத்துக்கான ரசீது கேட்டதாகத் தெரிகிறது. ஆனால், மருத்துவமனை நிர்வாகத்தினர் ரசீது கொடுக்க மறுத்துவிட்டதாக உறவினர் தரப்பில் கூறப்படுகிறது.

அபிராமி மருத்துவமனை
அபிராமி மருத்துவமனை

இதனால், ஆறுச்சாமியின் உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, ஆறுச்சாமியின் உறவினர்கள் மருத்துவர் ஒருவரின் செல்போனைப் பறித்துவிட்டு வெளியே சென்றுள்ளனர். இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள், அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

திடீரென்று நோயாளியின் உறவினர்களும், மருத்துவமனை ஊழியர்களும் சாலையில் மோதிக்கொண்டனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் போலீஸில் புகார் அளித்திருக்கிறது.

மோதல் சிசிடிவி
மோதல் சிசிடிவி

அதனடிப்படையில், ஆறுசாமியின் உறவினர்கள் ஏழு பேர் மீது மருத்துவமனை மற்றும் மருத்துவப் பணியாளர்களைத் தாக்குதல், கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். விசாரணையின் முடிவில்தான் உண்மை தெரியவரும்.

அடுத்த கட்டுரைக்கு