கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. அதைத் தடுக்க, அரசு தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தமிழகத்தில், சென்னையில்தான் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ளது. இன்று மட்டும் 817 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், சென்னையில் மட்டும் 558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,545 ஆகியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புள்ள இடங்களில், மூலிகைத் தேநீர், கபசுரக் குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டுவருகிறது. கோயம்பேடு பகுதியில் வீடு வீடாக மூலிகைத் தேநீர் வழங்கப்பட்ட பிறகு கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ராயபுரம் பகுதியில் இன்று மூலிகைத் தேநீர், கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுக்கு, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பாதிப்பும் அதிகமாகிவருவதால், வீடு வீடாக கணக்கெடுப்புப் பணியிலும் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். 4-வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் உள்ள தளர்வு காரணமாக பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 50 வயதுடைய நபர், நேற்று கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் மனஅழுத்தமே காரணம் எனத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இன்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 57 வயதுடைய நபர் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனர். விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``தற்கொலை செய்து கொண்ட 57 வயதுடைய நபர், ராயப்பேட்டையைச் சேர்ந்தவர். இவர், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரிடம் கிளர்க்காகப் பணியாற்றிவந்துள்ளார். அவருக்கு, கடந்த 25-ம் தேதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு ஓமந்தூரார் அரசு சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நடக்க முடியாததால், அவரின் மனைவி, இன்று காலை கழிவறைக்கு அழைத்துச்சென்றார். உள்ளே சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. அதனால் சந்தேகமடைந்த அவரின் மனைவி, கதவைத் தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. அதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கழிவறைக்குள் அவர் தூக்கில் தொங்கியிருக்கிறார். அவரை மீட்டு பரிசோதித்தபோது, அவர் இறந்தது தெரியவந்தது. இவரும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதுகுறித்து கொரோனா தடுப்பு சிறப்புக்குழு சிறப்பு அதிகாரியான ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ``சென்னையை தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடக்கூடாது. ஏனெனில், இங்கு ஒரு கோடிக்கு மேல் மக்கள் உள்ளனர். 15 மண்டலங்களுக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்க முதல்வருடன் ஆலோசனை நடந்துவருகிறது. இந்தியாவில், நகரங்களைப் பொறுத்தவரை சென்னையில்தான் அதிக அளவில் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் தற்கொலை குறித்து விசாரணை நடந்துவருகிறது" என்றார்.
அரசு மருத்துவர்களிடம் கேட்டபோது, ``அரசு மருத்துவமனைகளில், தரமான சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. குடும்பத்தை விட்டு தனியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சிலர், தனிமை, மனஅழுத்தம் ஆகியவை காரணங்களால் விபரீத முடிவை எடுப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்கள் தப்பி ஓடும் சம்பவங்களும் தொடர்ந்தன. அதைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்கொலை சம்பவங்களைத் தடுக்கவும் கவுன்சலிங் கொடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுவருகிறது" என்றனர்.