Published:Updated:

`காற்று வரல; நர்ஸ்கள்தான் கவனிக்கிறார்கள்!'- நந்தம்பாக்கத்தில் கொரோனா நோயாளிகள் திடீர் போர்க்கொடி

கொரோனா நந்தம்பாக்கம் வர்த்தக மைய மருத்துவமனை
கொரோனா நந்தம்பாக்கம் வர்த்தக மைய மருத்துவமனை

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்jதில் செயல்படும் சிறப்பு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் காற்று வரவில்லை என்றும் டாக்டர்கள் வந்து பார்க்கவில்லை என்றும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் இதுவரை 6009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை 3043 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் ராஜீவ்காந்தி, ஸ்டான்லி, ஒமந்தூரார் என அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுதவிர நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தைச் சிறப்பு மருத்துவமனையாக அரசு மாற்றியுள்ளது. அங்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் காற்றுவரவில்லை என்று நோயாளிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். விரைவில் காற்றோட்ட வசதி ஏற்படுத்தப்படும். ஏசி வசதி இல்லாததால் இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கும். மருத்துவர்கள், நர்ஸ்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.
சுகாதாரத்துறை அதிகாரிகள்
வாக்குவாதத்தில் ஈடுபடும் நோயாளிகள்
வாக்குவாதத்தில் ஈடுபடும் நோயாளிகள்

இந்தநிலையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகள் திடீரெனப் போராட்டத்தில் குதித்தனர். அவர்களை போலீஸாரும் மருத்துவ ஊழியர்களும் சமரசப்படுத்தினர். ஆனால் நோயாளிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவும் செய்துள்ளனர்.

அந்த வீடியோவில், `நாங்களும் 15 நாள்களுக்கு மேலாக இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளோம். இங்கு போதிய காற்றோட்ட வசதியில்லை. அதுகுறித்து பலதடவை கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உயரதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக ஒவ்வொரு முறையும் கூறிவருகிறீர்கள். ஆனால், காற்றோட்டம் இல்லாமல் சிரமப்பட்டுவருகிறோம். உடனே காற்று வர ஏற்பாடு செய்யுங்கள். மேலும், நோயாளிகளை மருத்துவர்கள் வந்து பார்ப்பதில்லை. நர்ஸ்களும் மருத்துவமனை ஊழியர்களும்தான் வருகின்றனர். எங்களுக்கு நோய் இருக்கிறதா இல்லையா என்றுகூட தெரியவில்லை.

`கரைசலைக் குடித்ததும் மயங்கினார்' - கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயன்றவருக்கு நேர்ந்த சோகம்
வாக்குவாதத்தில் ஈடுபடும் நோயாளிகள்
வாக்குவாதத்தில் ஈடுபடும் நோயாளிகள்

எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் சாப்பிட மாட்டோம். அனைவரும் உட்காருங்கள்' என்று கூறி நோயாளிகள் அனைவரும் தரையில் அமர்ந்தனர். நீண்ட இடைவெளியில் நிற்கும் நர்ஸ்கள், மருத்துவமனை ஊழியர்கள், போலீஸார் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இதுகுறித்து சுகாதாரத்துறை உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து நோயாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறினர். அதன்பிறகே நோயாளிகள் தங்களின் படுக்கைக்குச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் நந்தம்பாக்கம் வர்த்தக மைய சிறப்பு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் காற்றுவரவில்லை என்று நோயாளிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். விரைவில் காற்றோட்ட வசதி ஏற்படுத்தப்படும். ஏசி வசதி இல்லாததால் இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கும். மருத்துவர்கள், நர்ஸ்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். விரைவில் நோயாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு