Published:Updated:

கொடியம்பாளையம் பெண்ணுக்குக் கொரோனா! - முதன்முறையாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை

தனிமைப்படுத்தப்படும் கிராமம்
தனிமைப்படுத்தப்படும் கிராமம்

கொடியம்பாளையம் மீனவக் கிராமத்திற்கு மருத்துவக்குழுவினர் சென்று 18 நாள்கள் கிராமத்தைத் தனிமைப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளனர்.

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகேயுள்ள கொடியம்பாளையம் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், தன் மகளின் பிரசவத்துக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கச் சென்றிருக்கிறார். அப்போது, கொரோனா பரிசோதனை செய்து வந்தால்தான் அனுமதிக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

கொடியம்பாளையம் மீனவக் கிராம்
கொடியம்பாளையம் மீனவக் கிராம்

இதையடுத்து தாய், மகள் இருவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்குச் சென்றனர். இதில் தாய்க்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பிரசவ வேதனையில் உள்ள மகளுக்குக் கொரோனா இல்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டது. தகவலறிந்த கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் பபிதா தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குச் சென்று 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொரோனா பாதித்த பெண்மணியை அழைத்து வந்தனர்.

மயிலாடுதுறையில் சேர்க்கப்பட்ட அப்பெண்மணியைக் கொரோனா சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்ட நேரத்தில், மயிலாடுதுறையிலேயே கொரோனா சிகிச்சை மேற்கொள்ள போதுமான வசதிகள் இருப்பதால், இங்கேயே சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறையினர் முடிவு செய்தனர். அரசு மருத்துவமனையில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடத்தில் அப்பெண்மணி சேர்க்கப்பட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இங்கு 70 -க்கும் மேற்பட்ட ஒப்பந்த சுகாதாரப்பணியாளர்கள் சுகாதாரப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை கோட்டத்தில் இதுவரை 11 நபர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பியுள்ளனர்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை
மயிலாடுதுறை அரசு மருத்துவமனை

தற்பொழுது 12 -வது நபராகக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவருக்கு மயிலாடுதுறையிலேயே சிகிச்சை அளிக்கப்படுவதால் மருத்துவமனை வளாகத்தில் ஒருவித அச்சம்நிலவுகிறது. இதற்கிடையில் கொடியம்பாளையம் மீனவக் கிராமத்திற்கு மருத்துவக்குழுவினர் சென்று 18 நாள்கள் கிராமத்தைத் தனிமைப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு