Published:Updated:

புதுக்கோட்டை: `எங்களுக்கு மட்டும்தான் கொரோனா வருமா?’ - சிகிச்சைக்கு வர மறுத்த நோயாளிகள்


கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஆம்புலன்ஸோடு பல முறை சுகாதாரப் பணியாளர்கள் வீட்டுக்குச் சென்றும், அவர்களைச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை. காவல்துறையினர், வருவாய்த்துறை எனப் பல்வேறு தரப்பினரும் பேசி, சமாதானம் செய்து ஒரு நாளைக்குப் பிறகு தற்போது சிகிச்சைக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர்.

உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், தொற்றுப் பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பலரும் சிகிச்சைக்குச் செல்வதற்கு மறுத்துவருகின்றனர்.

கொரோனா
கொரோனா

ஒவ்வொருவரையும் போராடி சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் நிலை உள்ளதாகப் பணியாளர்கள் புலம்பித் தவிக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கீரமங்கலம் அருகே சேந்தன்குடியைச் சேர்ந்த ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அருகேயுள்ள நகரம் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சுமார் ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒன்பது பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அவர்கள் அனைவரும், ``அது எப்படி? எங்களுக்கு மட்டும்தான் வருமா... மற்றவர்களுக்கு எல்லாம் வராதா?எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை’’ என்று கூறி சிகிச்சைக்குச் செல்ல மறுத்துவிட்டார்கள். ஏற்கெனவே, மேற்பனைக்காட்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளர்கள் சிலருக்குக் கட்டாயமாகப் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அதில், ஐந்து பேருக்குத் தொற்று உறுதி செய்யப்படவே, ஐந்து பேரும் சிகிச்சைக்குச் செல்ல மறுத்துவிட்டனர்.

108 ஆம்புலன்ஸ்
108 ஆம்புலன்ஸ்
Representational Image

இதையடுத்து, சுகாதாரப் பணியாளர்கள் நீண்ட நேரம் போராடி அழைத்துச் சென்றுள்ளனர். இதேபோல், மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆவுடையார்கோவில் அருகே தொற்றுக்குள்ளான ஏழு பேரை அடுத்த நாள்தான் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆவுடையார்கோவில் அருகே செங்கானத்தில் நான்கு பேர் மற்றும் மங்கலத்தில் மூன்று பேர் என கடந்த 17-ம் தேதி தேதி ஏழு பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவர்களின் வீடுகளுக்குச் சென்ற சுகாதாரப் பணியாளர்களிடம் ,``எங்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை. நாங்கள் நலமோடு இருக்கிறோம்" என்று கூறி மருத்துவமனைக்குச் செல்ல மறுத்து, அவர்களைத் திருப்பி அனுப்பிவைத்தனர். ஆம்புலன்ஸோடு, பல முறை சுகாதாரப் பணியாளர்கள் வீட்டுக்குச் சென்றும் அவர்களைச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர், வருவாய்த்துறை எனப் பல்வேறு தரப்பினரும் பேசி, சமாதானம் செய்து, ஒரு நாளைக்குப் பிறகு தற்போது சிகிச்சைக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர்.

Corona
Corona

இது பற்றி சுகாதாரத்துறை பணியாளர்கள் கூறும்போது,``நகர்ப் பகுதிகளில் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பலரும் தாங்களாக முன்வந்து சிகிச்சைக்குச் செல்கின்றனர். கிராமப் பகுதியில் உள்ளவர்கள் ஒரு சிலரை மட்டும் சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதில் ரொம்பவே சிரமப்பட வேண்டிய நிலைதான் உள்ளது. தொற்று உறுதி செய்யப்படும் சிலருக்கு அதன் பிறகு காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கலாம். ஆனால், தொற்று இருக்கும் பலரும் `நமக்கு எந்த அறிகுறியும் இல்லை. அதனால், நமக்கு கொரோனா இருக்காது’ என்று நினைத்துக்கொள்வது தவறு. `நம்மால் குடும்பத்தினருக்கோ, மற்றவர்களுக்கோ கொரோனா பரவக் கூடாது’ என்பதை உணர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே சிகிச்சைக்கு முன்வர வேண்டும்’’ என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு