Published:Updated:

கூடலூர்: சாலையில் கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகள்! - தொடரும் அலட்சியம்

வீசப்பட்ட கொரோனா ரத்த மாதிரிகள்
வீசப்பட்ட கொரோனா ரத்த மாதிரிகள்

ஊட்டியிலுள்ள ஒரு கொரோனா சிகிச்சை மைய வளாகத்தில் வீசப்பட்ட மருத்துவக் கழிவுகளை குரங்குகள் வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றதைத் தொடர்ந்து, கொரோனா பரிசோதனைக்காகச் சேகரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாதிரிகளைச் சாலையோரங்களில் வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

கொரோனா கட்டுக்குள்ளிருந்த நீலகிரியில் தற்போது பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் இன்றளவும் இ-பாஸ் நடைமுறையிலிருந்தும், தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலையே நீடிக்கிறது.

கொரோனா
கொரோனா

தற்போதைய நிலவரப்படி நீலகிரி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நபர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 4,500 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.10-க்கும் மேற்பட்ட மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

ஆனால், கொரோனா மருத்துவக் கழிவுகளைக் கையாள்வதில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் அலட்சியப்போக்குடன் இருப்பதாக மக்கள், தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் சூழலில், கூடலூர் பகுதியில் கொரோனா பரிசோதனைக்காகச் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை சாலையோரங்களில் வீசிவிட்டுச் சென்றிருக்கும் செயல் மக்களை மேலும் அச்சமடையச் செய்திருக்கிறது.

used ppe kits
used ppe kits

கூடலூர்-கள்ளிக்கோட்டை செல்லும் சாலையில் பழைய பேருந்து நிலையம் அருகே மருத்துவக் கழிவுகள் கிடப்பதைப் பார்த்த கூடலூர் மக்கள் நம்மிடம் பேசுகையில், ``ஊட்டியிலுள்ள ஒரு கொரோனா சிகிச்சை மைய வளாகத்தில் வீசப்பட்ட மருத்துவக் கழிவுகளை குரங்குகள் வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றன. மேலும், கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்களையும் வீசிவிட்டுச் சென்றிருந்தனர்.

இந்தநிலையில்,கொரோனா பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாதிரிகள், சிறிய பிளாஸ்டிக் டப்பாக்கள் போன்றவற்றைக் கூடலூர் நகரின் மையப் பகுதியில் வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இதனால் மக்களுக்கும், கால்நடை வன விலங்குகளுக்கும் நோய்த் தொற்று பரவும் அபாயம் இருக்கிறது. நீலகிரியைப் பொறுத்தவரை சுகாதாரத்துறையினர் அலட்சியத்துடனேயே இருக்கிறார்கள்" என்கின்றனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், ``இன்று காலை பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டதில், பரிசோதனைக்காகச் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சாலை ஓரத்தில் கிடப்பதை உறுதி செய்தோம். நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் அவற்றை அங்கிருந்து உடனடியாக அகற்றினோம். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" என்றார்.

வீசப்பட்ட ரத்த மாதிரிகள்
வீசப்பட்ட ரத்த மாதிரிகள்

மக்கள் அதிகம் கூடும் பகுதியில் மருத்துவக் கழிவுகள் வீசப்பட்டிருக்கும் செயல் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையை விடுத்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு