Published:Updated:

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் கடுமையான ஊரடங்கு... நாளை கடைகள் திறந்திருக்கும்! - முழு விவரங்கள்

முழு ஊரடங்கு
முழு ஊரடங்கு

தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன் முழு விவரம்...

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 10-ம் தேதி முதல் தமிழகத்தில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது. இது வரும் 24-ம் தேதி அதிகாலை 4 மணியுடன் முடிவடையும் நிலையில், புதிய ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்தநிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் மருத்துவக்குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அடுத்தகட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவக்குழுவினர் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தனர். மருத்துவக்குழுவுடன் ஆலோசனைக் கூட்டத்தை முடித்த முதல்வர் ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் குழுவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ``கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காகவே ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக்குழுவினருடனான ஆலோசனையில் தமிழகத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாகப் பரிசீலிக்கப்படும். தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தினால்தான் நோய் கட்டுக்குள் கொண்டுவரப்படும் எனக் கூறப்பட்டுள்ளது” என்றார்.

அனைத்து சட்டமன்றக் கட்சிகள் உறுப்பினர் கூட்டத்தில் அனைவரும் ஊரடங்கை நீட்டிக்க ஆதரவு தெரிவித்தனர். கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``தமிழகத்தில் ஒருவாரம் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படும்” என்றார்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை, நிவாரணப் பொருள்களை வீடுகளுக்கே சென்று கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் வைத்ததாகத் தெரிவித்தார். `கிராமப்புறங்களில் தொற்று அதிகரிப்பதால் அரசு அங்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என பா.ஜ.க கேட்டுக்கொண்டது.

இந்தநிலையில் தற்போது புதிய ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன் விவரங்கள் கீழே

  • தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, தற்போதுள்ள ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்துக்கு முழுமையாக எவ்வித தளர்வுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும்.

    இந்த முழு ஊரடங்கு காலத்தில் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

  • மருந்தகங்கள். நாட்டு மருந்து கடைகள். கால்நடை மருந்தகங்கள்.

  • பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரிப் பத்திரிக்கை விநியோகம்.

  • பொதுமக்களுக்குத் தேவையான காய்கறி, பழங்கள் தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனம் மூலமாக வழங்கப்படும்.

  • தலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும் அத்தியாவசியத் துறைகள் மட்டுமே இயங்கும்.

  • தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர் வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  • மின்னணு சேவை e-commerce காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்.

  • உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மதியம் 12:00 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

முழு ஊரடங்கு - சென்னை
முழு ஊரடங்கு - சென்னை
  • ஜொமேட்டோ, ஸ்விக்கி போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும்.

  • பெட்ரோல், டீசல் பங்குகள் வழக்கம்போல் இயங்கும்.

  • ஏடிஎம் மற்றும் அவற்றுக்கான சேவை அனுமதிக்கப்படும்.

  • சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசிய பொருள்களைக் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.

  • உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்கு மட்டும், மாவட்டம்விட்டு மாவட்டம் செல்ல பதிவு முறையுடன் அனுமதிக்கப்படும்.

  • மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்துக்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை.

  • செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கலாம்.

    பொதுவான அறிவிப்புகள்

  • பொதுமக்கள் நலன் கருதி இன்று இரவு 9 மணிவரையிலும் நாளை ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.

  • வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்று மற்றும் நாளை தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.

அடுத்த கட்டுரைக்கு