Published:Updated:

`சென்னையில் பாசிடிவ் கேஸ் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்!’ - ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

சென்னையில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுப்பட்டுள்ள அனைவருக்கும் வைரஸ் சோதனை செய்யப்படுவதால் வரும் வாரத்தில் பாசிடிவ் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை தினம்தினம் அதிகரித்து 2000-த்தைக் கடந்துவிட்டது. அதிலும், குறிப்பாக தலைநகர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-த்தை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. அதனால் சென்னையில் வைரஸ் பரவல் அதிகமாக உள்ள இடங்களைக் கண்காணிக்க வருவாய்த்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் தலைமையில் குழு அமைத்துத் தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சென்னை
சென்னை

இந்த நிலையில், இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், `சென்னையில் அதிக மக்கள் தொகை இருப்பதுதான் வைரஸ் வேகமாக பரவிவருவதற்கு காரணம். அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க முடியும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் தாங்களாக முன்வந்து வைரஸ் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

உருக்குலைந்த ஊரடங்கு.... விழித்துக்கொண்ட அரசு... தப்பிக்குமா சென்னை?

அதேபோல் தன்னார்வ பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள், சமூக ஆர்வலர்கள், டெலிவரி பாய்கள், ஊடகத்தினர், அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களும் சோதனை செய்துகொள்ள முன்வர வேண்டும். சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் ஒரு தன்னார்வலர் மூலம் 12 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தங்களுக்கு கொரோனா வராது என மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

சென்னை
சென்னை

சென்னையைப் பொறுத்தவரைக் கடந்த சில நாள்களாக அதிகளவில் பரிசோதனை செய்துவருகிறோம். அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஆரம்பத்திலேயே சோதனை செய்வது நல்ல விஷயம்தான், எனவே மக்கள் அதைக் கண்டு அஞ்ச வேண்டாம். அதிக சோதனையால் வரும் வாரத்திலும் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும்.

`90% நோ அறிகுறி; 6 மண்டலங்கள்தான் டார்கெட்’ - சென்னையின் நிலையை விளக்கும் மாநகராட்சி ஆணையர் #Corona

மாநகராட்சிகளில் பணிபுரியும் அடிமட்ட ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை மற்றும் சந்தைகளில் பணிபுரிவோர், அத்தியாவசிய கடைகளில் வேலை செய்பவர்கள் எனப் பலருக்கும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கடைகளுக்குச் சென்றவர்கள்தான். எனவே, வெளியில் செல்லும்போது மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மாஸ்க் அல்லது துணியால் முகத்தை மூடிக்கொள்வதைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.

ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

மக்கள் பொது இடங்களில் எச்சில் துப்புவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். கிராமமோ நகரமோ நீங்கள் எங்கு இருந்தாலும் வெளியில் சென்று வந்தால் கைகழுவுவதை மறக்கவேண்டாம். ப்ளீச்சிங் பவுடர் கொண்டு தங்கள் வீடுகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மாஸ்க் அணிபவர்கள் பேசும்போது அதைக் கீழே இறக்கிவிட்டுப் பேசுகின்றனர். அதிகாரிகளாக இருந்தாலும் அதைச் செய்ய வேண்டாம், பேசும்போது மாஸ்க் அணிந்துகொண்டே பேசுங்கள். மாநகராட்சி பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தீயணைப்பு வீரர்கள், காவலர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் போன்ற பலரும் மக்களுக்காகக் கடுமையாக உழைத்து வருகின்றனர் அவர்களின் பணி பாராட்டத்தக்கது’ எனப் பேசியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு