Published:Updated:

`சிறந்த சிகிச்சையையும் மீறி இறப்பு!' -கொரோனாவால் உயிரிழந்த மதுரை நபருக்கு வேறு என்ன பாதிப்பு?!

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியானது.

கொரோனா காரணமாகப் பாதிப்படைந்த மதுரையைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். கொரோனாவால் தமிழகத்தில் ஏற்பட்ட முதல் இழப்பு இதுதான். 54 வயதான அந்த நபர், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனா
கொரோனா

மதுரையில் இந்த நபர் அனுமதிக்கப்பட்டபோதே, கவனிக்கப்பட்ட நபராக அறியப்பட்டார். காரணம், இந்த நபர் எந்த வெளிநாட்டுக்கும், வெளிமாநிலத்துக்கும் செல்லவில்லை. தமிழகத்திற்குள்ளேயே இருந்து கொரோனா பாதித்த முதல் நபர் இவர்தான். நேற்று இது குறித்துப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மதுரையில் அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கும், சென்னையில் அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கும் பயணப் பின்புலம் இல்லை. ஆனால், அவர்கள் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டவர்களோடு தொடர்பில் இருந்தது தெரியவந்திருப்பதாகக் கூறினார்.

அவருக்கு, மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் அவர், நள்ளிரவு உயிரிழந்துவிட்டார். இதைத் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், ``நீண்ட காலமாக உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த இந்த நபருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, அவருக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எங்களின் கடும் போராட்டம் மற்றும் சிறந்த சிகிச்சையையும் மீறி அவர் உயிரிழந்துவிட்டார்" என்று கூறியுள்ளார்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

இன்னொரு ட்வீட்டில், இந்த உயிரிழப்பைத் தொடர்புபடுத்தி, ``உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற காரணங்களால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தால், அவர்களுக்கு அது அதிக ஆபத்தை உண்டாக்கும் என்பதை நான் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்புகளில் கூறிவருகிறேன். உங்கள் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு இது போன்ற பாதிப்புகள் இருந்தால், நீங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்'' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது. சுமார் 1 லட்சம் பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர். 18,000-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். சீனாவை அடுத்து இத்தாலி, தொடர்ந்து கடுமையான பாதிப்பை சந்தித்துவருகிறது. இந்தியாவில், கொரோனா வைரஸால் சுமார் 536 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு