Published:Updated:

Corona: இரவு நேரங்களில் வரும் மக்கள்! - இ-பாஸ் மூலம் தேடும் திருச்சி அதிகாரிகள்

திருச்சி
திருச்சி

``சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற வெளி மாவட்டங்களிலிருந்து யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் வீட்டுக்கு வருகிறார்கள். அப்படி வருபவர்கள் அதிகாரிகளுக்குத் தகவல் அளிப்பதும் இல்லை.”

திருச்சி மாவட்டத்தில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே சொல்கிறது. ஒரே நாளில் புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் திருச்சி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையிலிருந்து வந்தவர்களை இ-பாஸ் பட்டியலை வைத்துக்கொண்டு அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

கொரோனா
கொரோனா

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 36 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 52 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மட்டுமே வெளிநாட்டிலிருந்து வந்தவர். மற்ற 51 பேரும் திருச்சி நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் மணப்பாறை பகுதியில் மட்டும் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், நகராட்சியில் பணிபுரியும் அதிகாரி ஒருவரும் அடங்குவார். அதேபோல் நேற்று தனியார் தங்க நகைக்கடையில் வேலை பார்த்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

`திருச்சி கலெக்டருக்கு எங்கள் நிலை தெரியுமா?' -குவைத்தில் தவிக்கும் 580 தமிழர்கள்

இந்த நிலையில் திருச்சி நகரில் ஏற்கெனவே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தில்லைநகர், உறையூர், கண்டோன்மெண்ட், பாலக்கரை, பெரிய கடை வீதி, மேலப்புலிவார்டு சாலை, எடமலைப்பட்டிபுதூர், கருமண்டபம், திருவெறும்பூர் பகுதிகளில் உள்ளவர்களுக்குப் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 24 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை
மாதிரிப்படம்

இதுதொடர்பாக திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், ``திருச்சி மாவட்டத்தில் 10 இடங்களுக்கும் மேல் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நேற்று மாலை தனியார் நகைக் கடையில் வேலை பார்த்த ஒரு நபருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவரை மருத்துவக் குழுவினர் பத்திரமாக அழைத்துச்சென்று மருத்துவ உதவிகளைச் செய்து வருகின்றனர். இந்த நிலையில், அக்கடையில் வேலை பார்த்துவந்த மற்ற ஊழியர்களுக்கும் பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

மேலும், ``சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற வெளி மாவட்டங்களிலிருந்து யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் வீட்டுக்கு வருகிறார்கள். அப்படி வருபவர்கள் அதிகாரிகளுக்குத் தகவல் அளிப்பதும் இல்லை. இவர்களால்தான் அப்பகுதியில் பலருக்கு வைரஸ் பரவுகிறது. இதைக் கண்காணிக்க அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளோம். சென்னை மற்றும் வெளிவட்டங்களிலிருந்து வருபவர்களை இ-பாஸ் பட்டியலைக் கொண்டு விசாரித்துக் கொண்டிருக்கிறோம்” என்றும் தெரிவித்தனர்

அடுத்த கட்டுரைக்கு