Published:Updated:

கொரோனா அச்சம்... மதுரைச் சிறையில் இருந்த 81 கைதிகள் சொந்த ஜாமீனில் விடுதலை!

மதுரை மத்திய சிறைச்சாலை
மதுரை மத்திய சிறைச்சாலை

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், அதன் எதிரொலியாக மதுரை மத்திய சிறை உட்பட, கிளைச் சிறைகளில் அடைக்கப்பட்ட 81 கைதிகளுக்கு சொந்த ஜாமீன் வழங்கி விடுவிக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பரவலாம் என்ற நிலையில், 1500-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ள மதுரை மத்திய சிறையில், கைதிகளைக் காண வரும் பார்வையாளர்களுக்கு கடந்த வாரம் முதல் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிறைக்குள் கொரோனா பரவாமல் தடுக்க சிறைக்கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று சிறைத்துறை மூலம் உயர் நீதிமன்றத்திடம் முறையிடப்பட்டது.

சிறைச்சாலை
சிறைச்சாலை

அதைத்தொடர்ந்து, உயர் நீதிமன்ற நிர்வாக நீதிபதி பிரகாஷ் தலைமையில், மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி, போலீஸ் கமிஷனர், ஐஜி, சிறைத்துறை டிஐஜி, எஸ்பி ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் முடிவின்படி, சிறு குற்றங்கள் புரிந்த 300 கைதிகளை சொந்த ஜாமீனில் விடுவிக்க முடிவு செய்யப்பட்டது.

அதில் முதல் கட்டமாக, மதுரைச் சிறையிலிருந்து 2 பெண்கள் உட்பட 53 விசாரணைக் கைதிகளையும், சிவகங்கை, தேனி, அருப்புக்கோட்டை, திருப்பத்தூர் கிளைச் சிறைகளிலிருந்து 28 கைதிகள் என மொத்தம் 81 பேர் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, மற்ற மாவட்ட கைதிகளையும் விடுவிக்க அந்தந்த மாவட்ட நீதிபதிகள் விரைவில் விசாரணை நடத்தி ஜாமீன் வழங்குவார்கள் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு