Published:Updated:

`ஒரே குடும்பத்தில் 11 பேருக்கு கொரோனா!’ -அதிர்ச்சி கொடுத்த வேலூர் நிலவரம்

வேலூர்
வேலூர்

கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்திருப்பதால், வேலூர் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில், `கொரோனா’ தொற்று சமூகப் பரவலாக மாறும் அபாயக் கட்டத்தை எட்டியிருக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். நேற்று ஒரே நாளில் 63 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், அதிர்ச்சிகர தகவல் என்னவென்றால், சேண்பாக்கம் ஈஸ்வரன் கோயில் தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியிருக்கிறது.

கொரோனா வார்டில் ஆய்வு செய்த வேலூர் கலெக்டர்
கொரோனா வார்டில் ஆய்வு செய்த வேலூர் கலெக்டர்

குறிப்பாக, மாநகரின் மையப்பகுதிகளான தோட்டப்பாளையம், சைதாப்பேட்டை, சேண்பாக்கம் ஆகிய பகுதிகளில் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தொற்றுக்குள்ளான நபர்களுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சி.எம்.சி மருத்துவமனை, பென்ட்லேன்ட் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்த நிலையில், தொற்றுக்குள்ளான நபர்களின் குடும்ப உறுப்பினர்களையும் பரிசோதனை செய்ய வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் 300 படுக்கைகள் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதை கலெக்டர் சண்முக சுந்தரம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கருணை இல்லத்தில் பார்வையிட்ட திருப்பத்தூர் கலெக்டர்
கருணை இல்லத்தில் பார்வையிட்ட திருப்பத்தூர் கலெக்டர்

திருப்பத்தூர் மாவட்டத்திலும் நோய் பரவல் தீவிரமாக இருப்பதால், `இன்று (19-ம் தேதி) முதல் 30-ம் தேதி வரை தினந்தோறும் காலை 6 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை மட்டுமே அனைத்து வியாபார கடைகளும் திறந்திருக்க வேண்டும். அதன் பிறகு எந்தவொரு கடையையும் திறந்து வைக்க அனுமதியில்லை’ என்று வியாபாரிகளுக்குத் திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415-ஐ எட்டியிருக்கிறது. இவர்களில் 120 பேர் சிகிச்சைக்குப் பிறகு பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் இறந்த நிலையில் 293 பேர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர். நேற்று புதியதாக 5 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 918 பேர் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வார்டில் ஆய்வு செய்த ராணிப்பேட்டை கலெக்டர்
கொரோனா வார்டில் ஆய்வு செய்த ராணிப்பேட்டை கலெக்டர்

இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கலெக்டர் திவ்ய தர்ஷினி தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். ரத்தினகிரி அருகே கன்னிகாபுரத்தில் சி.எம்.சி மருத்துவமனையின் புதிய கிளை கட்டப்பட்டுள்ளது. இங்கு, கொரோனா நோயாளிகளுக்காக 168 படுக்கைகளுடன் சிறப்பு வார்டும் திறக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு