Published:Updated:

`கல்லூரி மாணவருக்கு கொரோனா அறிகுறி?!’ -அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அதிர்ச்சி கொடுத்த நோயாளிகள்

மருத்துவப் பரிசோதனை
மருத்துவப் பரிசோதனை

‘கொரோனா’ வைரஸ் அறிகுறியுடன் அரக்கோணத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயது மாணவர் ஒருவர், சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துவருகிறார். சமீபத்தில், நண்பர்களுடன் கேரளாவுக்குச் சென்று திரும்பிய அந்த மாணவருக்கு, உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சளி, இருமலுடன் காய்ச்சலும் இருந்துள்ளது.

‘கொரோனா’ வைரஸ்
‘கொரோனா’ வைரஸ்

இதனால், தனக்கு ‘கொரோனா’ பாதிப்பு இருக்குமோ? என்று அஞ்சி, அரக்கோணம் நகரில் உள்ள தனியார் கிளினிக் மருத்துவரிடம் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார் அந்த மாணவர். அரக்கோணம் அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளுமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

மாணவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார். அவரைப் பரிசோதனைசெய்தபோது, ‘கொரோனா’ தொற்று அறிகுறி இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் மருத்துவமனை முழுவதும் பரவியது. இதனால் சிகிச்சைக்காக வந்திருந்த புறநோயாளிகள் பலர் மருத்துமனையிலிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

‘கொரோனா’ வைரஸ்
‘கொரோனா’ வைரஸ்

பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸ் ஏட்டு ஒருவரும் ‘தன்னை விட்டால்போதும்’ என்று நினைத்து அவசர அவசரமாக அருகிலிருந்த புறக்காவல் நிலையத்துக்கு ஓட்டம் பிடித்துள்ளார். இதனால், அரசு மருத்துவமனையில் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

அதையடுத்து, ‘கொரோனா’ அறிகுறி தெரிந்த மாணவரை மருத்துவர்கள் ‘108’ ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மாணவருடன் அவரின் தாய் சென்றுள்ளார். ‘கொரோனா’ அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த மாணவரை மருத்துவக் குழு தீவிரமாகக் கண்காணித்துவருகிறது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை

ஆய்வுக்குப் பின்னரே, மாணவர் ‘கொரோனா’ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா அல்லது சாதாரண வைரஸ் காய்ச்சல் தானா என்பது தெரியவரும். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் யாஸ்மின் தலைமையிலான அதிகாரிகள், அரக்கோணத்தில் இன்று முகாமிட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு