Published:Updated:

விலையில்லா மாஸ்க்; களத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள்! - அசத்தும் வத்தலகுண்டு பேரூராட்சி

முகக் கவசம் தயாரிப்பு
முகக் கவசம் தயாரிப்பு

கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள முகக் கவசம் தயாரித்து அனைவருக்கும் இலவசமாக வழங்கும் பணியைச் செய்து வருகிறது வத்தலகுண்டு பேரூராட்சி நிர்வாகம்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அகிலமே அலறிக்கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடு வருகிறார்கள். இந்நிலையில், தடுப்பு நடவடிக்கையாக முகக் கவசம் அணியச் சொல்கிறார்கள். ஆனால், பல இடங்களில் முகக் கவசம் விலை அதிகமாக விற்பனை செய்கிறார்கள். சில இடங்களில் முகக் கவசம் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். இந்தியா முழுவதும் தற்போது தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், தடுப்பு நடவடிக்கைகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், முகக் கவசம் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது வத்தலகுண்டு பேரூராட்சி.

முகக் கவசம் விழிப்புணர்வு
முகக் கவசம் விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பேரூராட்சி நிர்வாகம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக முகக் கவசம் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. இதற்காக, மகளிர் சுய உதவிக் குழுக்களைப் பயன்படுத்தினார்கள் அதிகாரிகள். சுய உதவிக்குழுக்கள் மூலம் பருத்தி ஆடைகளில் முகக் கவசம் தயாரிக்கும் முயற்சியைத் தொடங்கியது. இங்கு தயாரிக்கப்பட்ட முகக் கவசங்கள், முதல்கட்டமாகப் பேரூராட்சி பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன. தொடர்ந்து, காவல்துறை மற்றும் பொதுத்துறை பணியாளர்களுக்கும் இலவசமாக வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்துப் பேசிய, பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், ``முகக் கவசங்களைத் தயாரித்து இலவசமாகக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம். முதல்கட்டமாகப் பேரூராட்சிப் பணியாளர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களுக்குக் கொடுத்து வருகிறோம். இதைப் பொதுமக்களுக்கும் இலவசமாகக் கொடுக்க இருக்கிறோம். அதற்கேற்ப தயாரிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம். தேவைப்படும் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை அணுகலாம். முகக் கவசம் தயாராகத் தயாராகக் கொடுத்துக்கொண்டே இருப்போம். அதற்காக ஆயிரக்கணக்கில் முகக் கவசம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொரோனா விழிப்புணர்வு
கொரோனா விழிப்புணர்வு

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். எங்கள் பேரூராட்சிக்குட்பட்ட இடங்களில் கொரோனாவால் எந்தப் பாதிப்பும் இருக்கக் கூடாது என நினைக்கிறோம். அதற்காக எங்கள் அலுவலர்கள் கவனமாகப் பணியாற்றி வருகிறார்கள்'' என்றார்.

வத்தலக்குண்டு பேரூராட்சி நிர்வாகத்தின் இந்த முயற்சி, பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு