Published:Updated:

நிவாரணப் பணிக்குச் சென்ற லாரி; வெளியான `லஞ்ச’ வீடியோ! -நெல்லை ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்

கொரோனா பணிக்காக உணவுப் பொருள்களை ஏற்றிச் சென்ற லாரிகளை வழியில் மறுத்து லஞ்சம் வாங்கும் காவலரின் வீடியோ வைரலாகப் பரவியது. அதனால் விசாரணை நடத்திய காவல்துறை ஆணையர், புகாரில் சிக்கிய போலீஸை சஸ்பெண்ட் செய்தார். 

நெல்லை மாநகரில் விவசாயப் பொருள்கள் மற்றும் ரேஷன் கடைகளுக்கான உணவுப் பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை சோதனைச் சாவடிகளில் வழிமறிக்கும் போலீஸார் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

உணவுப் பொருள் ஏற்றிச் சென்ற லாரி
உணவுப் பொருள் ஏற்றிச் சென்ற லாரி

இது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் மாநகரக் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்திருந்தனர். அதனால் போலீஸாருக்குக் காவல்துறை ஆணையர் சார்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன், எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நெல்லை-தென்காசி சாலையில் ராணி அண்ணா மகளிர் கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் கடந்த 24-ம் தேதி பணியில் இருந்த ஆயுதப்படை காவலரான செல்வகுமார் என்பவர் அந்த வழியாகச் செல்லும் வாகனங்களை வழிமறித்து வசூல் செய்ததாகப் புகார் எழுந்தது.

முதலில் கடமைதான்! -கொரோனா பணிக்காக திருமணத்தைத் தள்ளி வைத்த பெண் போலீஸ்

அந்த வழியில் உணவுப் பொருளை ஏற்றிச் சென்ற லாரியை மறித்த காவலர் செல்வகுமார் 50 ரூபாய் லஞ்சம் பெறும் காட்சி வீடியோவாகப் பதிவுசெய்யப்பட்டிருந்தது. அது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதால், சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் காவலர் செல்வகுமார் லாரி டிரைவரை மிரட்டி லஞ்சம் பெற்றது தெரியவந்தது. அதனால் அவரை சஸ்பெண்ட் செய்து நெல்லை மாநகரக் காவல்துறை ஆணையர் தீபக் டாமோர் அதிரடியாக உத்தரவிட்டார். 

காவலர் செல்வகுமார்
காவலர் செல்வகுமார்

கொரோனா நிவாரணப் பணிக்கு உணவுப் பொருள் ஏற்றிச் சென்ற லாரி டிரைவரிடம் லஞ்சம் பெற்ற காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் நெல்லை மாநகரக் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு