Published:Updated:

`பயிர் இன்ஷூரன்ஸ் தொகைக்காக நடக்கும் கட்டப்பஞ்சாயத்து...' - கலங்கும் காவிரி டெல்டா விவசாயிகள்

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

இயற்கை இடர்ப்பாடுகளால், மகசூல் இழப்பு ஏற்பட்டால், அதை ஈடு செய்யும்விதமா இழப்பீடு கிடைக்கும்கிற நம்பிக்கையில்தான், விவசாயிகள் எல்லாருமே பயிர் இன்ஷூரன்ஸ் செய்றோம். ஆனால்...

பயிர் இன்ஷூரன்ஸ் இழப்பீட்டு தொகை வழங்குவதில் பல்வேறு விதமான முறைகேடுகள் நடைபெறுவதாகவும், இதனால் தங்களுக்கு சட்டப்படியும் நியாயமாகவும் கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை கிடைக்காமல் ஏமாற்றப்படுவதாகவும் காவிரி டெல்டா விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இது தொடர்பாக, தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூரில், விவசாய நிலத்தில் இறங்கி, 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியுடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்கள் எழுப்பிய குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியைக் கிளப்பக்கூடியதாக இருந்தது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைச் செயலாளர் சுகுமாறன், ``இயற்கை இடர்ப்பாடுகளால், மகசூல் இழப்பு ஏற்பட்டால், அதை ஈடு செய்யும்விதமாக இழப்பீடு கிடைக்கும்கிற நம்பிக்கையில்தான், விவசாயிகள் எல்லாருமே பயிர் இன்ஷூரன்ஸ் செய்றோம்.

விவசாயிகள் செலுத்தக்கூடிய பிரீமியம் மூலமாக இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்குது. ஆனால், பயிர் பாதிச்ச விவசாயிகளுக்கு பெரும்பாலும் இழப்பீட்டு தொகை முழுமையாகக் கிடைக்குறதே இல்லை. குறிப்பாக, கடந்த நான்கு ஆண்டுகளாக நிறைய விவசாயிகள் ஏமாற்றப்பட்டிருக்காங்க. இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் இதில் நடக்கக்கூடிய முறைகேடுகள் தடுக்கப்படும்.

பயிர் இனக்‌ஷூரன்ஸ் இழப்பீட்டுத் தொகை பெற்றவர்களின் பெயர், முகவரி, நிலத்தின் புல எண்கள், மகசூல் இழப்பின் மதிப்பீட்டு சதவிதம் ஆகிய தகவல்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும். இதை நாங்க தொடர்ச்சியாக வலியுறுத்திக்கிட்டு இருக்கோம். ஆனால், அரசு செவி சாய்க்க மாட்டேங்குது. இயற்கை இடர்ப்பாடுகளால் பயிர் பாதிக்கப்படும்போது, வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், பயிர் இன்ஷூரன்ஸ் நிறுவன அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து, மகசூல் இழப்பீட்டு அளவு கணக்கிடுவதாகச் சொல்றாங்க.

சுகுமாறன்
சுகுமாறன்

இந்த அடிப்படையில்தான் மகசூல் இழப்பு சதவிகிதம் அறிவிக்கப்படுது. ஆனால், பெரும்பாலான தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் இந்தத் தொகையை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்கவதே இல்லை. கட்டப்பஞ்சாயத்து செஞ்சு, பயிர் பாதிக்கப்படாதவங்களுக்கும் சேர்த்து அந்தத் தொகையைப் பிரிச்சுக் கொடுத்துடுறாங்க.

நெல் விவசாயிகளுக்கு இந்த நிலைமைனா, வாழை, சோளம், வெற்றிலை, காய்கறி உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செஞ்ச விவசாயிகளுக்கு கடந்த பத்தாண்டுகளாக, இழப்பீடே அறிவிக்கப்படலை. இந்த முறைகேடுகளும் குறைபாடுகளும் உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டும்” என்றார்.

விவசாயிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து கூட்டுறவு வங்கி அலுவலர்களிடம் கேட்டபோது, ``இது உண்மையல்ல. இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கக்கூடிய இழப்பீட்டுத் தொகையைத் தகுதியுடைய விவசாயிகளுக்கு முழுமையாக வழங்கி வருகிறோம். கட்டப்பஞ்சாயத்து செய்து, இழப்பீட்டு தொகையை நாங்கள் குறைத்து வழங்குவதாகச் சொல்வது உண்மையல்ல” என மறுத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு