Published:Updated:

`நாங்க ஆளும்கட்சியாக இருக்கும்போதே அகற்றுவீர்களா?!' -ஜெயலலிதா சிலையால் நாகர்கோவிலில் திடீர் பரபரப்பு

அகற்றப்பட்ட ஜெயலலிதா சிலை
அகற்றப்பட்ட ஜெயலலிதா சிலை

ஜெயலலிதா சிலையை வைப்பதற்கு முறையான அனுமதி பெறவில்லை என தெரிகிறது. இதையடுத்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார், ஆர்.டி.ஓ மயில் ஆகியோர் அங்கு சென்று சிலையை அகற்றும்படி கூறினர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பரதர் தெருவில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலை உள்ளது. இந்த சிலை அருகே அ.தி.மு.க-வினர் புதிதாக ஜெயலலிதா முழு உருவச் சிலை ஒன்றை இன்று திடீரென வைத்தனர். ஏழு அடி உயரம் கொண்ட ஜெயலலிதா சிலையை வைப்பதற்கு முறையான அனுமதி பெறவில்லை என தெரிகிறது. இதையடுத்து நாகத்கோவில் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார், ஆர்.டி.ஓ மயில் ஆகியோர் அங்கு சென்று சிலையை அகற்றும்படி கூறினர்.

இதற்கிடையில் அங்கு சென்ற அ.தி.மு.க குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் அசோகன் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் "இந்த சிலையை எங்கள் உயிர் இருக்கும் வரை அகற்ற விடமாட்டோம். எங்கள் உயிர் போனபிறகுதான் சிலையை அகற்ற முடியும்" என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயலலிதா சிலையை அகற்ற விடமாட்டோம் என மல்லுகட்டிய அ.தி.மு.க-வினர்
ஜெயலலிதா சிலையை அகற்ற விடமாட்டோம் என மல்லுகட்டிய அ.தி.மு.க-வினர்

இதைத் தொடர்ந்து கூடுதல் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். அ.தி.மு.க-வினரும் குவிந்தனர். அப்போது அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சிலை அருகே வந்தனர். உடனே அ.தி.மு.க நிர்வாகிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாங்கள் ஆளும்கட்சியாக இருக்கும்போதே தி.மு.க-வினரின் தூண்டுதலுடன் முன்னாள் முதல்வர் சிலையை அகற்ற வருகிறீர்களா என கேள்வி எழுப்பினர். மேலும் அதிகாரிகள் சிலரிடம் சிலையை அகற்றினால் நடப்பதே வேறு என கொந்தளித்தனர்.

ஆனால் அதிகாரிகளோ ``நீங்கள் அனுமதி வாங்கிக்கொண்டு சிலையை நிறுவுங்கள். அதுவரை இந்த சிலையை எடுத்து நாங்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறோம்'' என்றனர். அதற்கு சம்மதிக்காத அ.தி.மு.க-வினர் நாங்களே சிலையை எடுத்து எங்கள் கஸ்டடியில் வைத்துக்கொள்கிறோம் என்றனர். எப்படியாவது சிலையை இங்கிருந்து அகற்றினால் போதும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அகற்றி எடுத்துச்செல்லப்படும் ஜெயலலிதா சிலை
அகற்றி எடுத்துச்செல்லப்படும் ஜெயலலிதா சிலை

இதையடுத்து அ.தி.மு.க-வினர் ஜெயலலிதா சிலையை பீடத்தில் இருந்து அகற்றி அருகில் உள்ள பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் சிலையை மூடி மறைத்து வைத்தனர். பின்னர் சிலை வைப்பதற்கான அனுமதி கடிதத்தை அதிகாரிகளிடம் எழுதி கொடுத்தனர். திடீரென முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முழு உருவச் சிலை நிறுவப்பட்டதும், அதிகாரிகள் அதை அகற்றிய சம்பவமும் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த கட்டுரைக்கு