Published:Updated:

அலங்காநல்லூர் வாடிவாசலில் தமிழ் மரபுவழித் திருமணம்! - ஆட்சியரிடம் அனுமதி கோரிய ஜோடி

கார்த்திகேயன்-வித்யாதரணி
கார்த்திகேயன்-வித்யாதரணி

``ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர் வாடிவாசலில்வைத்து திருமண உறுதியேற்பை நடத்த விரும்பினோம். அதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்க வந்தோம்'’ - கார்த்திகேயன் - வித்யாதரணி

மதுரையைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்களான கார்த்திகேயன்-வித்யாதரணி, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நாளில் வாடிவாசலில்வைத்து தமிழ் மரபுவழியில் திருமணம் செய்துகொள்ள மதுரை கலெக்டரிடம் அனுமதி கேட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

கார்த்திகேயன்-வித்யாதரணி
கார்த்திகேயன்-வித்யாதரணி

நம்மிடம் பேசிய கார்த்திகேயன், ``எனக்குச் சொந்த ஊர் அலங்காநல்லூர். சிறு வயதிலிருந்தே தமிழ் மொழி, பண்பாட்டின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. தமிழர்களின் வாழ்வியலே தற்சார்பு வாழ்கை முறைதான். அதைப் பற்றி எழுதிவருகிறேன். அதுபோல் வித்யாதரணியும் வலைதளத்தில் எழுதிவருகிறார்.

`ஒவ்வொண்ணும் ஒரு மாஸ் சீன்!' அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சிறப்பு படங்கள்

இயற்கையைக் காப்பாற்றியும், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தும் வந்தவர்கள் தமிழர்கள். சம காலத்தில் பலவித கலாசாரங்கள் புகுந்ததால், தமிழர்களின் வாழ்வியல் பண்பாடு மறைக்கப்பட்டுவருகிறது. இந்த நேரத்தில்தான் தமிழர்களின் பண்பாட்டு மீட்பாக ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்தது. 2017-ல் மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் என்னைப்போலவே தமிழ்ப் பண்பாட்டின் மீது பிடிப்புகொண்ட வித்யாதரணியைச் சந்தித்தேன்

கார்த்திகேயன்-வித்யாதரணி
கார்த்திகேயன்-வித்யாதரணி

இருவரும் தொடர்ந்து பேசி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தோம். எங்கள் இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். அதனால், எங்கள் திருமணத்தை ஆடம்பரமில்லாமல் எளிமையாகத் தமிழர் மரபு வழியில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.

இதுதான் தமிழர்களின் திருமண முறை என்று இயற்கையைப் பாழ்படுத்தாமல், பொருளாதாரத்தை வீணடிக்காமல் நடத்தப்படும் தமிழர் திருமண முறை மக்கள் மத்தியில் போய்ச் சேர வேண்டும். அதனால், ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர் வாடிவாசலில்வைத்து திருமண உறுதியேற்பை நடத்த விரும்பினோம். அதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்க வந்தோம்" என்றார்.

கார்த்திகேயன்-வித்யாதரணி
கார்த்திகேயன்-வித்யாதரணி

வித்யாதரணி கூறுகையில், ``எந்தவொரு சடங்கும் இல்லாமல், இயற்கையைச் சாட்சியாகவைத்து, இயற்கையை அழிக்கும் எந்தவொரு செயலும் இல்லாமல், நம் பாரம்பர்ய உணவுகளுடன் அடுத்த தலைமுறையைக் காக்கும் வகையில் நடத்தப்படுவதுதான் தமிழர் மரபு திருமண முறை. அது செலவில்லாதது. இந்த கொரோனா பேரிடரில் அதுதான் சிறந்தது. அதன் சிறப்பை உலகம் அறிந்துகொள்ள வேண்டும் என்பதால்தான், தமிழ் மக்கள் கூடும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் எங்கள் இல்லற இணையேற்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ள விரும்புகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு