Published:Updated:

`எங்கள ஆணவக்கொலை செய்யப் பார்க்கிறாங்க!' - வேலூர் எஸ்.பி ஆபீஸில் கதறிய காதல் தம்பதி

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

பட்டியலின சமூக இளைஞரைத் திருமணம் செய்துகொண்டதால், ஆணவக்கொலை செய்யப் பார்ப்பதாக வேலூர் எஸ்.பி அலுவலகத்தில், தி.மு.க பிரமுகர் மீது காதல் தம்பதி புகாரளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காதல் தம்பதி
காதல் தம்பதி

வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியை அடுத்த சின்னமோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரின் மகள் அஸ்வினி எம்.எஸ்ஸி படித்த இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப்குமார் என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்துவந்தனர்.

அஸ்வினி
அஸ்வினி

காதலன் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண் வீட்டு தரப்பில் காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அஸ்வினிக்கு அவசர அவசரமாக வேறொரு மாப்பிள்ளையைப் பார்த்து திருமணம் செய்துவைக்க பெற்றோர் முயற்சி செய்தனர்.

அதிர்ச்சியடைந்த அஸ்வினி வேறு வழியின்றி கடந்த மாதம் 27-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறினார். காதலனுடன் திருச்சிக்குச் சென்று கடந்த 4-ம் தேதி திருமணம் செய்துகொண்டார். உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் காதல் தம்பதியினர், பாதுகாப்பு கோரி வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் இன்று தஞ்சம் புகுந்தனர். 

பிரதீப்குமார்
பிரதீப்குமார்

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அஸ்வினி, ``நான் காதலித்த இளைஞரை வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்று அவமானப்படுத்திப் பெற்றோர் மிரட்டல் விடுக்கிறார்கள். என் அப்பாவின் நண்பரான தி.மு.க பிரமுகர் சி.ஜி.ஆனந்தன் கூலிப்படையை ஏவி எங்களை ஆணவக்கொலை செய்யப் பார்க்கிறார்.

என்னை வீட்டில் அடைத்து வைத்திருந்தபோது அடித்துத் துன்புறுத்தினார்கள். ஒரு வேளை உணவுமட்டும்தான் கொடுத்தனர். பெல்டால் அடித்தும் கொடுமைப்படுத்தினார்கள். இதற்கெல்லாம் முழுக்க முழுக்க காரணம், தி.மு.க பிரமுகர் சி.ஜி.ஆனந்தன்தான். எங்களின் நண்பர்கள் சிலரை இப்போது பிடித்து கட்டிவைத்துத் தாக்குகிறார்கள். நாங்கள் அந்தக் கும்பலின் கண்ணில் பட்டால் கண்டிப்பாகக் கொலை செய்துவிடுவார்கள். நாங்கள் நிம்மதியாக வாழ ஆசைப்படுகிறோம். எங்களின் நண்பர்களையும் காப்பாற்ற காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

காதல் தம்பதி
காதல் தம்பதி

சி.ஜி.ஆனந்தனிடம் பேசினோம். ``அந்தப் பொண்ணுக்கும் எனக்கும் என்ன சார் பிரச்னை இருக்கப்போகுது. நான் ஊர்ல பெரிய மனுஷன். ஊர்ல நல்லது கெட்டது நடந்தாலும் நைட் 12 மணிக்குக்கூட மக்கள் என்னதான் வந்து முதல்ல எழுப்புவாங்க. அந்தப் பையன் பிரதீப்குமார், ஏற்கெனவே நாலைந்து பொண்ணுங்ககூடப் பழக்கம் வச்சுருக்கான். இந்தப் பொண்ண ஏமாத்தி கூட்டிகிட்டுப் போயிட்டான். பெத்தவங்க என்கிட்ட வந்து சொன்னாங்க. பொண்ண காணோம். கண்டுபிடிச்சு கொடுங்கனு போலீஸ்ல புகார் கொடுத்தோம். நான் மிரட்டல் விடுத்திருந்தா காவல்துறை என் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கட்டும். அந்தப் பொண்ணு சொல்ற குற்றச்சாட்டு ஒரு சதவிகிதம்கூட உண்மையில்லை’’ என்றார்.