Published:Updated:

கொரோனா முன்னெச்சரிக்கை; தூத்துக்குடியில் மாஸ்க் அணிந்து திருமணம் செய்துகொண்ட மணமக்கள்!

மாஸ்க் அணிந்து திருமணம்
மாஸ்க் அணிந்து திருமணம்

தூத்துக்குடியில், கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மணமக்கள் முகத்தில் மாஸ்க் அணிந்து திருமணம் செய்துகொண்டனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பெரிய நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளன. அதன் அடிப்படையில், ஊழியர்களும் வீட்டில் இருந்தே வேலைபார்த்துவருகின்றனர். அதிக பக்தர்கள் கூடும் பிரசித்திபெற்ற பெரிய கோயில்கள் அனைத்தும், வரும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

திருமணம்
திருமணம்

வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பெரிய கடைகள் ஆகியவையும் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் 27-ம் தேதி தொடங்கி, நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு, வரும் ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகு நடைபெறும் என அறிவித்துள்ளது தமிழக அரசு. இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை முதலே அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால், அத்தியாவசியத் தேவைக்கான பலசரக்கு சாமான்கள், காய்கறிகள், கீரைகள், பழங்கள், பால் பாக்கெட்டுகள் ஆகியவற்றை மக்கள் நேற்றே வாங்கி வைத்துக்கொண்டனர். இதனால், நேற்று ஒரே நாளில் காய்கறிச்சந்தை, பலசரக்குக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இன்று ரயில்கள், பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை.

மாலை மாற்றும் மணமக்கள்
மாலை மாற்றும் மணமக்கள்

மேலும், இன்று சுபமுகூர்த்தநாள் என்பதால், பெரிய திருமண மண்டபங்களில் நடைபெற இருந்த திருமணங்களை, உறவினர்களே முன்வந்து வேறொரு தேதிக்கு மாற்றி வைத்துள்ளனர். இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் அனைத்து கோயில்களிலும் நடைபெற இருந்த திருமணங்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், சில திருமணங்கள் எளிமையாக, குறைவான எண்ணிக்கையிலான உறவினர்களுடன் நடந்தேறியுள்ளது.

தூத்துக்குடி, முனியசாமிபுரத்திலுள்ள மாரியம்மன் கோயிலில் சங்கர்-சிவசங்கரி ஆகிய மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் 50-க்கும் குறைவான உறவினர்களே கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் மணமக்கள் முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு திருமணம் செய்துகொண்டனர். மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு முதல் தாலி கட்டிய பிறகு மணமக்கள் வீட்டிற்குச் செல்லும் வரை மாஸ்க் அணிந்தே சென்றனர்.

வெறிச்சோடிக் காணப்படும் திருச்செந்தூர் கோயில் கடற்கரை
வெறிச்சோடிக் காணப்படும் திருச்செந்தூர் கோயில் கடற்கரை

மணமக்கள் அருகில் நின்ற சில உறவினர்களும் மாஸ்க் அணிந்தே உடன் சென்றனர். இதுகுறித்து மணமக்களிடம் பேசினோம், “ரெண்டு மாசத்துக்கு முன்னாலயே எங்களுக்கு கல்யாணம் நிச்சயம் செஞ்சு தேதியும் குறிச்சுட்டாங்க. கல்யாணத்துக்கு ரெண்டு பேரு வீட்டு தரப்புலயும் 800 பேர் வரை பத்திரிக்கை கொடுத்து கல்யாணத்துக்கு அழைச்சிருந்தோம்.

தற்போது நிலவிவரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இன்று ஒருநாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது அரசு. அரசுக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் மிக நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து வீட்டின் அருகிலுள்ள மாரியம்மன் கோயிலில் எளிமையாக கல்யாணம் செய்துள்ளோம். கல்யாணத்திற்கு வந்த அனைவரையும் மாஸ்க் அணிய வலியுறுத்தியுள்ளோம். வீட்டிற்கு வரும் உறவினர்களை, வீட்டு வாசாலில் வைத்துள்ள கிருமிநாசினியால் கைகழுவிவிட்டு வர அறிவுறுத்தியுள்ளோம்” என்றனர்.

மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு உணவு கொடுத்த தன்னார்வலர்கள்
மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு உணவு கொடுத்த தன்னார்வலர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பிரசித்திபெற்ற திருச்செந்தூர் கோயில், பனிமயமாதா பேராலயம், கடற்கரை, பூங்காக்கள், பேருந்துநிலையங்கள், சாலைகள் ஆகியவை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. சாலையோரங்களில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவுப் பொட்டலங்கள், குடிநீர்பாட்டில்கள் வழங்கினர்.

அடுத்த கட்டுரைக்கு