Published:Updated:

`அதிகாரிகளின் தூண்டுதலால் காவலர்கள் தாக்குகின்றனர்!’ - நீதிபதியிடம் முறையிட்ட முகிலன்

திடீரென நேற்று சிபி.சி.ஐ.டி. போலீஸார் முகிலனை 3-நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

முகிலன்
முகிலன்

முகிலன் 100 நாள்களுக்கு மேலாக எங்கு இருக்கிறார் என்று தெரியாத அளவுக்கு மர்மமாக காணாமல் போனார். இந்தச் சமயத்தில், அவர்மீது குளித்தலை காவல்நிலையத்தில் பாலியல் வழக்கைக் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் அவரோடு போராட்டங்களில் கலந்துகொண்ட பெண் ஒருவர். இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி முகிலன் நண்பர் மூலம், திருப்பதி ரயில்நிலையத்தில் முகிலன் ரயில்வே போலீஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. சூழலியல் போராளி முகிலனை ஆந்திர ரயில் நிலைய போலீஸாரிடம் இருந்து தமிழக சி.பி.சி.ஐ.டி போலீஸார் மீட்டுவந்தனர். அதன்பிறகு அவரை கரூர் ஜே.எம் - 2 கோர்ட்டில் கடந்த 10-ம் தேதி இரவு ஆஜர்படுத்தினர்.

முகிலன்
முகிலன்

அப்போது, நீதிபதி விஜய்கார்த்திக் வரும் 24-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, திருச்சி சிறையில் முகிலன் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், திடீரென நேற்று சிபி.சி.ஐ.டி. போலீஸார் முகிலனை 3-நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது முகிலன் நீதிமன்றத்தில், ``விசாரணைக் கைதியான என்னை, சிறையில் காவல்துறை உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் சிறைக்காவலர்கள் சிறையில் வைத்து, என்னை கடுமையாகத் தாக்குகின்றனர்" என்று நீதிபதியிடம் தனது சட்டையை அவிழ்த்துக் காட்டி, முகிலன் புகார் கூறினார்.

முகிலன் தொடர்பாக அந்தப் பெண் என்ன சொல்கிறார்?!

மேலும், நீதிபதியிடம் சில கோரிக்கைகளையும் முன்வைத்தார். இதைக் கேட்ட நீதிபதி விஜய்கார்த்திக், ``உங்களது புகாரை எழுத்துபூர்வமாக அளித்தால், அதன்பேரில் உரிய உத்தரவுகளை பிறப்பிப்பேன்" என்று கூறியதையடுத்து, முகிலன் தனது தரப்பு கோரிக்கைகளையும், முறையீடுகளையும் எழுதி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதை கவனத்தில் எடுத்துகொண்ட நீதிபதி விஜய்கார்த்திக், முகிலனின் கோரிக்கைகள் குறித்து இன்று (23.7.2019) விசாரிப்பதாக கூறி, இவ்வழக்கை ஒத்திவைத்தார். இதைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்று மீண்டும் முகிலனை கரூர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆஜர்படுத்தினர்.

கரூர் கோர்ட்டில் முகிலன்
கரூர் கோர்ட்டில் முகிலன்
நா.ராஜமுருகன்

முகிலன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கென்னடி, அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜெயந்தியிடம் நீதிமன்றத்தில், ``முகிலனை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கஸ்டடி எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கூடாது" என்று கடும் வாக்குவாதம் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விஜய்கார்த்திக், முகிலனை மூன்று மணி நேரம் போலீஸ் காவலில் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், ``தற்போதே விசாரணை மேற்கொண்டு, இன்று மாலை நீதிமன்றம் கலைவதற்குள் நீதிமன்றத்தில் முகிலனை ஆஜர்படுத்த வேண்டும்" எனவும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் காவல் வாகனத்தில் முகிலனை கரூர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ள அழைத்துச் சென்றனர்.