Published:Updated:

கோவை: `தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம்’ - ஆட்சியர் இராசாமணிக்கு கொரோனா தொற்று

ஆட்சியர் இராசாமணி
ஆட்சியர் இராசாமணி

கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணிக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கோவையில் கொரோனா பாதிப்பு பரவலாகி வருகிறது. இதுவரை இல்லாத வகையில், கோவையில் நேற்று ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. வருமானவரித்துறை அதிகாரிகள் 4 பேர், துடியலூர் காவல்நிலையத்தில் 6 போலீஸாருக்கு ஏற்கெனவே கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மதுக்கரை போலீஸார் 7 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராசாமணி
இராசாமணி

மிக முக்கியமாக மாவட்ட ஆட்சியர் இராசாமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகப் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்தவர் இராசாமணி. தமிழகத்தில் கொரோனா பரவத் தொடங்கிய காலகட்டத்தில் சென்னைக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்டிருதந்த மாவட்டமாகக் கோவை இருந்தது. ஆனால், தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டியதால் கோவையில் கொரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்தது. இதனிடையே, கடந்த சில வாரங்களாகக் கோவையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. ஆட்சியர் இராசாமணி தொடக்கத்தில் இருந்தே களத்தில் சுறுசுறுப்பாக கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறார்.

தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காத நிறுவனங்கள், விதிமுறைகளை மீறிய வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். கோவை செல்வபுரம் பகுதியில் அலட்சியமாகக் கொரோனா பரப்பிய தங்க பட்டறை நிறுவனத்தைக் கடுமையாக எச்சரித்ததுடன், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டார். இப்படி, அலட்சியமாகக் கொரோனா பரவும் அபாயத்தை ஏற்படுத்திய நிறுவனங்கள் மீது சீல் வைப்பது, வழக்குப்பதிவு செய்வது போன்ற நடவடிக்கைகள் பாய்ந்தன.

இராசாமணி
இராசாமணி

"கொரோனாவை பார்த்து நாம் பயப்படக் கூடாது. நாம் துணிவுடன் அதை எதிர் கொண்டால்தான், மக்கள் நிம்மதியாக இருக்க முடியும்" என அரசு அதிகாரிகளைப் பணி செய்ய ஊக்குவித்துள்ளார் இராசாமணி. அதேநேரத்தில், "மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வருகின்ற நாள்கள் மிகவும் கடுமையானவை. அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்" என அடிக்கடி கூறி வந்தார்.

இராசாமணி
இராசாமணி

பரிசோதனைகளைத் துரிதப்படுத்துவது, தனிமனித இடைவெளி, தனிமைப்படுத்துதல் போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார். இந்தக் காலகட்டத்திலும், கோவை குறு சிறு நிறுவனங்கள், பொதுமக்கள் பிரச்னைகளை நேரில் சந்தித்து தீர்வுக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொடிசியா சங்கத்தில் பேசி, கொடிசியா மையத்தை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றினார். இப்படி கொரோனாவுக்கு எதிராக, களத்தில் நின்று தொடர்ந்து போராடி வந்த ஆட்சியர் இராசாமணிக்கு கடந்த சில நாள்களாக லேசான அறிகுறி இருந்துள்ளது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அவர் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு, சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது.

கோவை: `தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம்’ - ஆட்சியர் இராசாமணிக்கு  கொரோனா தொற்று

ஆட்சியர் இராசாமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் கோவை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டுமென கோவை மக்கள் பிரார்த்தனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, இராசாமணியுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு