Published:Updated:

‘சார், சைடிஷ் வாங்க வந்தேன்!’-ஊரடங்கில் சுற்றித்திரிந்த வாலிபருக்கு ஷாக் கொடுத்த புதுக்கோட்டை போலீஸ்

மதுபாட்டில்களுடன் சிக்கிய இளைஞர்
மதுபாட்டில்களுடன் சிக்கிய இளைஞர்

இருசக்கர வாகனத்தைச் சோதனை செய்த போது மது பாட்டில்கள் சிக்கியன. அப்பாவுக்கு மது வாங்கிச்செல்வதாகவும் இங்குள்ள மளிகைக் கடையில் சைடிஸ்ட் வாங்க வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் ஏப்ரல் 21ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்று காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்த நிலையில்தான், காய்கறிக்கடைகள், மளிகைக்கடைகள் தவிர்த்து வேறு எந்தக் கடைகளும் திறக்கப்படவில்லை. குறிப்பாக, டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கடந்த 24ம் தேதி முதலே மூடப்பட்டன. மதுப்பிரியர்கள் பலரும் முன்பே தேவையான மதுபாட்டில்களை வாங்கி வைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இது ஒருபுறம் என்றால், மறுபுறம் தடையையும் மீறி ஆங்காங்கே கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் போலீஸார் மக்கள் நடமாட்டம் குறித்த சோதனையில் ஈடுபட்டிருந்தனர். மூக்குடி சாலையில் டூவீலரில் வந்த ஒரு இளைஞரைப் பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூற இருசக்கர வாகனத்தைச் சோதனை செய்த போது மது பாட்டில்கள் சிக்கின.

மதுபாட்டில்களுடன் சிக்கிய இளைஞர்
மதுபாட்டில்களுடன் சிக்கிய இளைஞர்

போலீஸார் விசாரித்த போது, அப்பாவுக்கு மது வாங்கிச்செல்வதாகவும் இங்குள்ள மளிகைக் கடையில் சைடிஸ்ட் வாங்க வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீஸார் அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ``கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. கொஞ்சம் கூட ஆபத்தை உணராமல் இதுபோன்ற இளைஞர்கள் சிலர் வீட்டிற்குள் இருக்கச் சொன்னால், சட்டம் பேசுவது, மதுகுடிக்க வருவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் மறைமுக மது விற்பனை நடப்பதாகத் தகவல் வருகிறது. அதன்பேரில் சோதனையும் நடத்தி வருகிறோம். ஆபத்தை உணர்ந்து பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு