Published:Updated:

நீலகிரி: பழங்குடிகளிடம் வேகமெடுக்கும் கொரோனா இரண்டாம் அலை... கலக்கத்தில் கூடலூர் மக்கள்!

கூடலூர்
கூடலூர்

பெருந்தொற்றின் முதல் அலை நீலகிரியில் பழங்குடிகளை பெரிய அளவில் பாதிக்காத நிலையில், இரண்டாம் அலை பழங்குடிகளிடம் வேகமாகப் பரவி வருகிறது.

மக்கள் அடர்த்தி குறைவாக இருப்பதாலும், அரசு அலுவலர்களின் அர்ப்பணிப்பாலும் கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டமாக நீலகிரி மாவட்டம் இருந்தது. இ-பாஸ் மற்றும் இ-ரிஜிஸ்ட்ரேஷன் முறையைக் கடுமையாகப் பின்பற்றிய இங்கு, முதல் அலை வெற்றிகரமாக எதிர்கொள்ளப்பட்டது.

கூடலூர்
கூடலூர்

ஆனால், இதற்கு நேரெதிராக இரண்டாம் அலையில் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. மக்கள் தொகையில் குறைவாக உள்ள பழங்குடி மக்களிடமும் தொற்று வேகமெடுத்துள்ளது, பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பந்தலுார் அருகில் உள்ள சோலாடி பழங்குடியின கிராமத்தில் கடந்த வாரம் 6 நபர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது. தொற்றை அறியாத இந்தக் கிராம மக்கள், தங்களின் கலாசார நிகழ்வை நடத்தினர். இதில் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 31 பழங்குடியினர் உட்பட 41 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கூடலூர்
கூடலூர்

இது குறித்து நம்மிடம் பேசிய கூடலூர் சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர், ``முதல் அலையைப் பொறுத்தவரை பழங்குடி மக்களுக்குப் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால், இந்த இரண்டாம் அலை இவர்களிடத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. ஏற்கெனவே இவர்களின் மக்கள்தொகை குறைவாக உள்ளது. இறப்பு விகிதம் அதிகரித்தால் பேராபத்தில் முடியும். தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு சில பழங்குடிகள் மருத்துவமனைகளுக்கு வர மறுத்து வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதாகத் தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். கலெக்டர் உள்ளிட்ட சில அதிகாரிகளின் அறிவுறுத்தலையடுத்து, பழங்குடியின மக்கள் மருத்துவமனை வரச் சம்மதிக்கின்றனர்" என்றார்.

கூடலூர்
கூடலூர்

இது குறித்து பழங்குடி செயற்பாட்டாளர்கள், ``தோடர், கோத்தர், இருளர், குறும்பர், பணியர், காட்டு நாயக்கர் என 6 வகையான பழங்குடி மக்கள் இங்கு வாழ்ந்துவருகின்றனர். ஆனால், இவர்களின் மக்கள்தொகை மிக மிகக் குறைவாகவே உள்ளது. இவர்களின் இனத்தை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு அதிகம் உள்ளது. கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்'' என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு