Published:Updated:

'ஏப்ரல் 30 வரை ஊரடங்கு, அனைத்து கட்டுப்பாடுகளும் தொடரும்!’ -முதல்வர் அறிவிப்பில் என்னென்ன சலுகைகள்?!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் வண்ணம், இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், மேலும் நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் நிலவிவந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் கலந்தாலோசித்தார். அப்போது, பல்வேறு மாநில முதல்வர்களும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும்படி கோரிக்கை விடுத்ததாகக் கூறப்பட்டது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மகாராஷ்டிரா, மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசுகள் தெரிவித்தன.

மோடி
மோடி

தமிழக அரசோ, பிரதமர் அறிவுரையின்படி செயல்படுவோம் எனக் கூறிவந்தது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில், கடந்த மார்ச் 24-ம் தேதி அன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு அதை 15.4.2020 அன்று காலை வரை நீட்டித்தது. ஊரடங்கு உத்தரவை தீவிரமாகக் கடைப்பிடித்துவருவதன் காரணமாக, தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பெரிய அளவில் பரவாது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு ஓகே.. நிதிப்பற்றாக்குறை.. ஆளுநர் தலையீடுகள்? - பிரதமர் ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன?

இந்த நிலையில், தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தொடர்பாக மாநிலங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளை பிரதமர் காணொலிக் காட்சி மூலமாக கலந்தாய்வு மேற்கொண்டார். இக்கலந்தாய்வின்போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும், தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் எனவும், பிரதமரிடம் எடுத்துரைத்தேன். மேலும், 30.4.2020 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்ற என்னுடைய கருத்தைத் தெரிவித்தேன். நானும், மற்ற முதலமைச்சர்களும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

மோடி
மோடி

பிரதமரின் கலந்தாய்வுக் கூட்டத்தின் நடவடிக்கைகளின் அடிப்படையிலும், உலக சுகாதார அமைப்பின் கருத்தின்படியும், மருத்துவ நிபுணர் குழு மற்றும் பொது சுகாதார வல்லுநர் குழுக்களின் பரிந்துரைகளின்படியும், மாநிலத்தில் ஊரடங்கைத் தளர்த்தினால், நோய்த் தொற்று அதிகரிக்கக் கூடும் என்பதை கருத்தில் கொண்டும், 11.4.2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியும், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன்படியும், குற்றவியல் விசாரணை முறை சட்டப் பிரிவு 144-ன்படியும், 30.4.2020 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.

`மற்ற மாநிலங்களை போல் ஊரடங்கில் அவசரம் தேவையில்லை!' - தலைமைச் செயலாளர்

கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் நோக்கில், பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன்படியும், குற்றவியல் விசாரணை முறை சட்டப் பிரிவு 144-ன்படியும், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அனைத்து கட்டுப்பாடுகளும் தொடரும். ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் காரணத்தினால், தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம்பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும்.

ஊரடங்கு
ஊரடங்கு

கட்டடத் தொழிலாளர்கள் உட்பட, பதிவுபெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கும், குடும்பம் ஒன்றுக்கு இரண்டாவது முறையாக 1,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும். பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, மே மாதத்திற்காக 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம்பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும்.

தமிழ்நாட்டில், காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலான காலத்தில், அடுமனைகள் (பேக்கரி) இயங்க தடையில்லை என்பதையும், ஏற்கெனவே உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி அடுமனைகளிலும் பார்சல் விற்பனை மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெளிவுபடுத்தப்படுகிறது. மேலும், சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள மக்கள், கொரோனா நோய் தொடர்பான தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள, டெலி மெடிசின் சொஸைட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் பதிவுபெற்ற சிறந்த மருத்துவர்களைக்கொண்டு, தொலை மருத்துவ முறை மூலம் தங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குத் தெளிவுபெற தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பாக இருப்பதுதான் அரசுக்கு மிகவும் முக்கியமானது. ஆகவே, தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்படுகின்ற அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் பின்பற்றி, “விழித்திருங்கள், விலகி இருங்கள், வீட்டில் இருங்கள்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில், சமூக இடைவெளியைக் கடைபிடித்து, கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு