Published:Updated:

`திடீர் மழையால் மூழ்கிய மாடுகள்; சூறாவளி காற்றில் சரிந்த சந்தை!’ -காஞ்சிபுரத்தில் சோகம்

மழையில் இறந்த மாடுகள்
மழையில் இறந்த மாடுகள்

நீர் தேங்கும் பகுதியில் காய்ந்திருந்த வண்டல் மண் சேறுபோல குழைய ஆரம்பித்தது. மழை தொடர்ந்ததால் மாடுகள் ஏரிக்குள் இருந்து வெளியேற முயன்றன.

காஞ்சிபுரம் பகுதியில் திடீரென பெய்த கனமழையால் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் 50-க்கும் மேற்பட்ட மாடுகளைக் காணவில்லை என அப்பகுதியினர் கவலை தெரிவிக்கின்றனர்.

மாடுகளை மீட்கும் விவசாயிகள்
மாடுகளை மீட்கும் விவசாயிகள்

காஞ்சிபுரம் பகுதியில் நேற்று மாலை சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. வாலாஜாபாத் பகுதியில் உள்ள தென்னேரி. ஆலப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாடுகள் தென்னேரி ஏரி பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்றிருக்கின்றன. ஏரியின் உள்பகுதிகளில் நிறைய மாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. திடீரென சூறாவளிக் காற்று வீசத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பலத்த மழையும் பெய்யத் தொடங்கியது. இதனால் நீர் தேங்கும் பகுதியில் காய்ந்திருந்த வண்டல் மண் சேறுபோல குழைய ஆரம்பித்தது. மழை தொடர்ந்ததால் மாடுகள் ஏரிக்குள் இருந்து வெளியேற முயன்றன. சேற்றில் கால் வைத்த மாடுகளின் கால்கள் சேற்றில் சிக்கிக்கொண்டன. இதனால் அந்த மாடுகள் வெளியேற முடியாமல் சேற்றில் சிக்கித் தவித்தன.

சூறைக்காற்றுடன் மழை தொடர்ந்து பெய்ததால் ஏரிக்குள் தண்ணீர் அதிக அளவு தேங்க ஆரம்பித்தது. இதையடுத்து, மாடுகள் வெளியே வரமுடியாமல் நீரில் சிக்கி இறக்கத் தொடங்கின. சேற்றில் இருந்து சில மாடுகள் மீண்டு வந்துள்ளன. பலத்த மழை பெய்துகொண்டிருக்கும்போது மாடுகள் தத்தளித்துக்கொண்டு இருப்பதைக் கண்ட கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

மாடுகளை மீட்கும் விவசாயிகள்
மாடுகளை மீட்கும் விவசாயிகள்

உடனே ஏரிக்குள் இறங்கி மீன் பிடிக்கப் பயன்படுத்தப்படும் படகுகள் மூலம் மாடுகளை மீட்கத் தொடங்கினர். இருப்பினும் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மாடுகள் சேற்றில் சிக்கி இறந்துவிட்டன. இன்னும் 50-க்கும் மேற்பட்ட மாடுகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. வேறுபகுதிகளுக்கு அந்த மாடுகள் சென்றனவா, நீரில் மூழ்கி இறந்தனவா என்பது இன்னும் தெரியாத நிலையில் மாடுகளை அதன் உரிமையாளர்கள் தேடிவருகிறார்கள்.

தீயணைப்புத் துறையினர் மாடுகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாடுகள் இறந்து மிதந்ததைக் கண்ட அதன் உரிமையாளர்கள் கண்ணீருடன் அவற்றை மீட்டனர். இதனால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது. மாடுகளை இழந்த விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

`திடீர் மழையால் மூழ்கிய மாடுகள்; சூறாவளி காற்றில் சரிந்த சந்தை!’ -காஞ்சிபுரத்தில் சோகம்

கொரோனா தொற்று காரணமாக காஞ்சிபுரம் வையாவூர் பகுதியில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டது. அங்கு அமைக்கப்பட்ட 30 கடைகளில் 17 கடைகளின் மேற்கூரை சூறாவளிக் காற்றில் விழுந்தது. காய்கறிக் கடைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மார்க்கெட் ஷெட் அமைப்பதற்கு சில ஆளும் கட்சிப்புள்ளிகள் கொடுத்த அனுபவமில்லாத காண்டிராக்டர்கள் அந்த ஒப்பந்தத்தை எடுத்திருந்ததாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.

அதுபோல் தேவையான நெல்கொள்முதல் நிலையம் அமைக்காததால் உலர்களங்களில் அறுவடை செய்து சேகரிக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்துவிட்டன. மேல்கதிர்பூர், முசரவாக்கம், தாமல் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்து உலர்கலங்களில் சேகரிக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்துவிட்டன.

மழையில் நனைந்த நெல் மூட்டைகள்
மழையில் நனைந்த நெல் மூட்டைகள்

``வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே எங்களுக்கு வருமானம். இரவு பகலாக உழைத்து அறுவடை செய்து கொண்டுவந்த நெல், கொள்முதல் நிலையம் இல்லாததால் மழையில் நனைந்து விட்டது“ என விவசாயிகள் கண்ணீரோடு தெரிவிக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு