Published:Updated:

`ஐ.பி.எஸ் அணியை வீழ்த்திய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்!' - கூட்டணியில் கலக்கிய பவன், விஜய கார்த்திகேயன் ஜோடி

அதிகாரிகள் டீம்
அதிகாரிகள் டீம்

கிரிக்கெட் பேட்டுடன் களத்தில் இறங்கிய முதல்வர், அமைச்சர் ஜெயக்குமார் வீசிய பந்துகளைச் சிதறடித்து அசத்தினார். அருகிலிருந்த அனைத்து அதிகாரிகளும் கைதட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை உற்சாகப்படுத்தினர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான போட்டி இன்று தொடங்கி வரும் பிப்ரவரி மாதம் வரையில் நடைபெறவுள்ளது.

கிரிக்கெட் போட்டி
கிரிக்கெட் போட்டி

இதற்கு முந்தைய ஆண்டுகள் நடைபெற்ற போட்டிகளில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மட்டுமே கலந்துகொண்டனர். ஆனால், இந்த ஆண்டு புதிதாக வருமானவரித் துறை, வனத்துறை, ரயில்வே துறை மற்றும் வருவாய்த் துறை என மொத்தம் ஆறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரை அருகில் உள்ள சிம்சன் விளையாட்டு மைதானத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். வெள்ளை பேன்ட், வெள்ளை சட்டை, ஷூ, கேப் என ஒரு விளையாட்டு வீரராகவே நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் முதல்வர்.

அப்போது அதிகாரிகள் மத்தியில் பேசிய அவர், ``அனைத்துத் துறைகளிலும் உயர் அதிகாரிகளாக இருப்பவர்களுக்குப் பல்வேறு பணிச்சுமைகள் இருக்கும். அந்தச் சுமைகள் குறையவேண்டும் என்றால் அனைவரும் விளையாட வேண்டும். அப்படி விளையாடினால் மன அழுத்தம் குறையும், மகிழ்ச்சி உண்டாகும், ஆரோக்கியமாக இருக்கலாம். ஆரோக்கியமாக இருந்தால் எந்த வயதிலும் விளையாடலாம். அதனால் நம் வேலையும் சிறக்கும்” எனப் பேசினார்.

பேட்டிங் செய்யும் முதல்வர்
பேட்டிங் செய்யும் முதல்வர்

பின்னர் போட்டிகளில் பங்கேற்கவிருந்த அதிகாரிகளுக்குக் கைகுலுக்கி தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதையடுத்து கிரிக்கெட் பேட்டுடன் களத்தில் இறங்கிய முதல்வர், அமைச்சர் ஜெயக்குமார் வீசிய பந்துகளைச் சிதறடித்து அசத்தினார். அருகிலிருந்த அனைத்து அதிகாரிகளும் கைதட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து அதிகாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி தொடங்கியது.

`செல்லாத நோட்டுகளாக மாறிய சேமிப்புப் பணம்!' -கலங்கிய மூதாட்டிகளுக்கு கரம்கொடுத்த திருப்பூர் கலெக்டர்

முதலில் ஐ.ஏ.எஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் சார்பாக ஓப்பனராகக் களமிறங்கிய தாராபுரம் சப் கலெக்டர் பவன்குமார் 44 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அணியின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரைப் பதிவு செய்தார். இவரைத் தொடர்ந்து பேட்டிங் செய்த அதிகாரிகள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.

ஆறாவது விக்கெட்டுக்குக் களமிறங்கிய திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் 38 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து இறுதிவரையில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பவன்குமார் - விஜய கார்த்திகேயன் ஜோடி 108 ரன்களைக் குவித்தது. இவரைத் தொடர்ந்து பேட்டிங் செய்த அதிகாரிகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஐ.ஏ.எஸ் அணி இறுதியாக 164 ரன்களைக் குவித்தது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஐ.பி.எஸ் அணியில் அதிகாரி தீபக் 3 விக்கெட்டுகளையும் அபினன் இரண்டு விக்கெட்டுகளையும் வினீத் மற்றும் மயில்வாகனன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். தற்போது ஐ.பி.எஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 31 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது. போட்டி முடிவில் 62 ரன்கள் வித்தியாசத்தில் ஐ.ஏ.எஸ் அணி வெற்றிபெற்றது.

தமிழகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் இணைந்து விளையாடும் இந்த கிரிக்கெட் தொடர் அதிகக் கவனம் பெற்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு