Published:Updated:

சுரேஷ் ரெய்னாவின் கவனத்தை ஈர்த்த திருப்பத்தூர் எஸ்.பி! -`Feedback Cell' பின்னணி

சுரேஷ் ரெய்னா - எஸ்.பி விஜயகுமார்
சுரேஷ் ரெய்னா - எஸ்.பி விஜயகுமார்

``கிரிக்கெட் உலகில் ஸ்டாராக இருக்கும் சுரேஷ் ரெய்னா பாராட்டியிருப்பது, எங்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது’’ என்று திருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமார் கூறியிருக்கிறார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா, காவல்துறை பணியின் தரம் எப்படியிருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காக புகார் தாரர்களிடமே `Feedback Cell’ மூலம் பின்னூட்டம் கேட்கப்படுகிறது. இந்த முன்னெடுப்பைச் செய்தது, அந்த மாவட்டத்தின் எஸ்.பி விஜயகுமார் ஐ.பி.எஸ்.

சுரேஷ் ரெய்னா ட்வீட்
சுரேஷ் ரெய்னா ட்வீட்

புகார் அளித்த 72 மணி நேரத்தில், அவர்களைத் தொடர்பு கொண்டு கருத்துகள் பதிவுசெய்யப்படுகிறது. அதற்கேற்ப வழக்கைக் கையாளும் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிக்குப் பாராட்டுகளோ அறிவுறுத்தலோ வழங்கப்படுகிறது. இதன் மூலமாகக் காவல்துறையின் பொறுப்பும் அக்கறையும் அதிகரிக்க வழிவகைச் செய்துள்ளார் எஸ்.பி விஜயகுமார். இதுதொடர்பான சிறப்பு காணொலியை, இந்திய ஐ.பி.எஸ் சங்கம் தனது அதிகாரபூர்வ `ட்விட்டர்’ பக்கத்தில் பகிர்ந்திருந்தது.

இதை `ரீ-ட்வீட்’ செய்திருக்கும் இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேனுமான சுரேஷ் ரெய்னா, ``திருப்பத்தூர் எஸ்.பி-யின் அற்புதமான முன்னெடுப்புக்கு வாழ்த்துகள். காவல்துறை வேலையை இன்னும் செறிவூட்டவும் பொதுமக்களின் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் எஸ்.பி எடுத்துள்ள முயற்சி உதவும்’’ என்று குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்.

எஸ்.பி விஜயகுமார் ட்வீட்
எஸ்.பி விஜயகுமார் ட்வீட்

ரெய்னாவின் இந்தப் பாராட்டு நெட்டிசன்கள் பலராலும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. எஸ்.பி விஜயகுமாருக்கும் பாராட்டுகள் குவிகின்றன. சுரேஷ் ரெய்னாவின் பதிவுக்கு `ரீ-ட்வீட்’ செய்துள்ள எஸ்.பி விஜயகுமார், ``உங்களின் பாராட்டு மேலும் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கிறது’’ என்று நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, எஸ்.பி விஜயகுமாரிடம் பேசினோம். ``புகார் கொடுப்பவர்களை மூன்று நாள்களுக்குப் பிறகு தொடர்பு கொள்கிறோம். அந்தப் புகாரின் மீதான விசாரணையைச் சரியான முறையில் கொண்டு செல்கிறார்களா... என்பதுகுறித்து கேட்கிறோம். விசாரணை சரியில்லை என்று சுட்டிக்காட்டினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தவற்றை சரிசெய்து கொள்ள அறிவுறுத்துகிறோம். அதேசமயம், பொதுமக்கள் பாராட்டினாலும் அந்த அதிகாரியை ஊக்கப்படுத்துகிறோம்.

சுரேஷ் ரெய்னா - எஸ்.பி விஜயகுமார்
சுரேஷ் ரெய்னா - எஸ்.பி விஜயகுமார்

கிரிக்கெட் உலகில் ஸ்டாராக இருக்கும் சுரேஷ் ரெய்னா பாராட்டியிருப்பது எங்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது. திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை என்று தனியாக பிரித்துப் பார்க்கவேண்டாம். இது, தமிழ்நாடு காவல்துறையின் ஓர் அங்கம்தான். இந்த `Feedback Cell’ தொடங்கி நான்கு மாதங்களாகிறது. சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்கு காரணம், `Feedback’ கேட்பதற்காகத்தான். மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ், ஆங்கிலத்திலும் தகவல்களை பகிர்கிறோம்’’ என்றார் புன்னகையுடன்.

அடுத்த கட்டுரைக்கு