Published:Updated:

பயோடேட்டாவில் உதித்சூர்யாவின் படம்!- தேனி அரசு மருத்துவக் கல்லூரி டீனைக் குறிவைக்கும் சி.பி.சி.ஐ.டி

உதித்சூர்யா தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கையான போது நடந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக நமக்கு முக்கிய ஆவணம் ஒன்று கிடைத்தது.

Bio Data
Bio Data

நீட் ஆள்மாறாட்ட வழக்கை தேனி சி.பி.சி.ஐ.டி போலீஸார் தீவிரமாக விசாரித்துவரும் சூழலில், உதித்சூர்யா தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கையான போது நடந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளன.

Udith Surya
Udith Surya

நேற்று கைது செய்யப்பட்ட உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசனை, தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்துகொண்டிருக்கும் போது, மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரனை விசாரணைக்காக அழைத்தது சி.பி.சி.ஐ.டி போலீஸ். அவரும், தேனி சமதர்ம புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. குறிப்பாக, நீட் கலந்தாய்வு முடிந்து, தேனி மருத்துவக் கல்லூரிக்கு வந்தது உண்மையான உதித் சூர்யா தானா? அல்லது நீட் தேர்வு எழுதிய அந்தப் போலியான நபரா? எனக் கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது. அதற்கு, ‘கல்லூரிக்கு வந்து அட்மிஷன் போட்டது போலியான நபர்தான்’ என டீன் ராஜேந்திரன் பதில் கொடுத்துள்ளார்.

Bio Data
Bio Data

தற்போது, கல்லூரிச் சேர்க்கை நடைபெற்ற நேரத்தில், மாணவர்களின் பயோடேட்டாவைக் கேட்டிருக்கிறது கல்லூரி நிர்வாகம். அதன்படி உதித்சூர்யாவின் உண்மையான படம் அதில் ஒட்டப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர் ராஜேந்திரனின் வாக்குமூலத்தின் படி, கல்லூரி சேர்க்கைக்கு வந்தது போலியான உதித்சூர்யா என்றால், பயோடேட்டாவில் ஒட்டப்பட்டுள்ள படத்தை ஒப்பிட்டுப் பார்க்காமல், கல்லூரி நிர்வாகம் அட்மிஷன் போட்டதா என்ற கேள்வி எழுகிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சி.பி.சி.ஐ.டி போலீஸார், “கல்லூரி டீன் மீது எங்களுக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன. முதல்கட்டமாகத் தனிப்படை போலீஸார் அவரிடம் 2 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை செய்திருக்கிறார்கள். அப்போது அவர் பல கேள்விகளுக்குப் பதில் கொடுக்க முடியாமல் திணறியுள்ளார். எனவே, நாங்கள் அவரை தீவிர விசாரணைக்கு உட்படுத்த இருக்கிறோம்” என்றனர்.

Theni CBCID Office
Theni CBCID Office

இது தொடர்பாக விளக்கம் பெற டீன் ராஜேந்திரனைத் தொடர்புகொண்ட போது, “வழக்கு விசாரணை நடந்துகொண்டிருப்பதால், என்னால் எதுவும் பேச முடியாது” என்றார்.

நாள்கள் செல்லச் செல்ல மர்ம முடிச்சுகள் பல விழுந்துகொண்டே செல்கின்றன. அதை ஒவ்வொன்றாக அவிழ்க்குமா சி.பி.சி.ஐ.டி?