Published:Updated:

` நாளை முதல் குடிக்க மாட்டேன்...!' - சபதம் எடுக்கச் சென்ற விவசாயிக்கு நேர்ந்த சோகம்

` கயிறு கட்டிக்கொண்டால் குடிக்க முடியாது. அதனால் கடைசியாகக் குடிப்போம்' என்று எண்ணி, டாஸ்மாக் கடைக்குள் நுழைந்தார்.

கார்த்திகேயன்
கார்த்திகேயன்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள தட்டாம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி, கார்த்திகேயன் (45). இவர், குடிக்கும் பழக்கம் உள்ளவர். தினமும் குடித்துவிட்டு வந்து குடும்பத்தில் தகராறு செய்துவந்துள்ளார். இதையடுத்து, இவரின் உறவினர்கள் கண்டித்தும் இவரால் அந்தப் பழக்கத்தை விட முடியவில்லை.

அய்யனார் கோயில்
அய்யனார் கோயில்

இந்நிலையில், பண்ருட்டி அருகே உள்ள கொஞ்சிக்குப்பம் கிராமத்தில் இருக்கும் அய்யனார் கோயிலுக்குச் சென்று, கையில் கயிறு கட்டிக்கொண்டால் குடிப் பழக்கத்தை நிறுத்திவிடலாம் எனச் சிலர் யோசனை தெரிவித்துள்ளனர்.

Vikatan

இதையடுத்து, கார்த்திகேயனும் கோயிலுக்குச் சென்று கயிறு கட்டிக்கொண்டு சபதம் எடுக்க முடிவுசெய்து புறப்பட்டுள்ளார். கோயிலுக்குச் செல்லும் வழியில், டாஸ்மாக் கடையைப் பார்த்த அவர்,` கயிறு கட்டிக்கொண்டால் குடிக்க முடியாது. அதனால் கடைசியாகக் குடிப்போம்' என்று எண்ணி, டாஸ்மாக் கடைக்குள் நுழைந்தார். அங்கு அளவுக்கு அதிகமாகக் குடித்துள்ளார். பின்னர், போதையிலேயே அய்யனார் கோயிலுக்கு நடந்துசென்றவர், நடக்க முடியாமல் கீழே மயங்கி விழுந்துள்ளார்.

அய்யனார் கோயில்
அய்யனார் கோயில்

நீண்ட நேரம் மயக்கத்தில் கிடந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். அவரைப் பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கடாம்புலியூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியை மறக்க கோயிலில் கயிறு கட்டிக்கொள்ளச் சென்ற இடத்தில், `இன்றே கடைசி' என அதிகமாகக் குடித்தவர் உயிரிழந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.