Published:Updated:

`என் ஸ்டேஷன் இது; கலெக்டரக்கூடப் பாரு... வெளியே போ!'- கடலூர் பெண் எஸ்.ஐயைச் சுற்றும் சர்ச்சை

எஸ்.ஐயிடம் மொபைல் போனை கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அங்கு நடந்த சம்பவத்தையும் எஸ்.ஐயின் பேச்சையும் இளைஞர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர்.

எஸ்.ஐ உத்தராம்பாள்
எஸ்.ஐ உத்தராம்பாள்

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி போலீஸ் ஸ்டேஷனின் எஸ்.ஐ உத்தராம்பாள். இவர் சமீபத்தில் பணிமுடிந்து புதுவையில் உள்ள தனது வீட்டுக்குச் செல்லும்போது அவருக்கு எதிரே பைக்கில் இளைஞர் செல்போனில் பேசிக்கொண்டே சென்றுள்ளார். இதைப் பார்த்த எஸ்.ஐ.உத்தராம்பாள், இளைஞரின் வண்டியை நிறுத்தி செல்போனைப் பறிமுதல் செய்ததுடன், ஸ்டேஷனில் வந்து போனை பெற்றுக்கொள்ளுமாறு கூறியதாகத் தெரிகிறது. அதன்படி, அந்த இளைஞரும் ரெட்டிச்சாவடி போலீஸ் ஸ்டேஷனுக்கு மொபைல் போனை வாங்குவதற்காகத் தனது நண்பருடன் சென்றுள்ளார்.

எஸ்.ஐ. உத்தராம்பாள்
எஸ்.ஐ. உத்தராம்பாள்

ஆனால் அங்கு எஸ்.ஐ. உத்தராம்பாள் இல்லை. அங்கிருந்த காவலர்கள் எஸ்.ஐ., உத்தராம்பாள் புதுவையில் உள்ள தனது வீட்டில் இருக்கிறார் என்றும், மாலைதான் வருவார் என்றும் கூறியதால் அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். மீண்டும் மாலை மொபைல் போனை கேட்பதற்காக நண்பர்களுடன் இளைஞர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துள்ளார். எஸ்.ஐயிடம் மொபைல் போனை கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அங்கு நடந்த சம்பவத்தை, எஸ்.ஐயின் பேச்சை இளைஞர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர்.

`மனசுல என்ன சிங்கம் பட சூர்யான்னு நினைப்பா?!' - மிரட்டிய ரவுடி; பதிலடி கொடுத்த எஸ்.ஐ

அதில், ``நான் செய்தது தவறுதான். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் பறிமுதல் செய்த மொபைல் போனை நீங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் செல்லாமல் ஏன் உங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்றீர்கள். நீங்ககூடதான் ஹெல்மெட் அணியாமல் சென்றீர்கள்" என சம்பந்தப்பட்ட இளைஞர் கேள்வி எழுப்புகிறார். அவர் பேசும்போதே அவரின் நண்பர் ஒருவரும், ``மொபைலை நீங்க எப்படி பிடுங்கலாம். தப்பு என்றால் அபராதம் விதிக்க வேண்டியதுதானே" எனக் கேட்க ஆத்திரமடைந்த எஸ்.ஐ உத்தராம்பாள், ``நீ யாரு... உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்.

எஸ்.ஐ. உத்தராம்பாள்
எஸ்.ஐ. உத்தராம்பாள்

என் ஸ்டேஷன் இது. நீ போன் பேசிட்டுவந்ததே ஒரு குற்றம். உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. நீ யாரை வேணுமானாலும் பாத்துக்கோ. நீ கலெக்டரக்கூட பாரு. இல்ல வேற யாருகிட்ட வேணும்னாலும் சொல்லு. எனக்கு எந்த பயமும் கிடையாது. உனக்கு பதில் சொல்ல இங்க நான் உட்காரல. வெளியே போயா" எனச் சத்தம் போடுகிறார். இதனால் அங்கு சில நிமிடங்கள் பரப்பு நிலவியது. இந்த வீடியோவை இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பரவவிட அந்தக் காட்சிகள் தற்போது வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

 `குல்லா போடும் போலீஸ் நான் கிடையாது!'- ஆளும்கட்சி பிரமுகரைத் தெறிக்கவிட்ட கேரள எஸ்.ஐ!