Published:Updated:

`தாய்க்கு சிபாரிசுக் கடிதம்; மகனின் டிராவல் ஹிஸ்ட்ரி' - தனிமைப்படுத்தப்பட்ட கடலூர் எம்.பி

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் உறவினரோடு தொடர்பில் இருந்ததால் கடலூர் எம்.பி டி.ஆர்.வி.எஸ் ரமேஷ் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

தி.மு.க சார்பில் கடந்த 2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் டி.ஆர்.வி.எஸ் ரமேஷ். பண்ருட்டியில் வசித்துவரும் இவர், தி.மு.க-வின் மாவட்ட வர்த்தக அணிச் செயலாளராக இருக்கிறார். இந்த நிலையில், எம்.பி டி.ஆர்.வி.எஸ் ரமேஷை டந்த 27-ம் தேதி அவரது வீட்டில் சந்தித்த நபர் ஒருவர், தனது தாய்க்கு புற்றுநோய் இருப்பதாகக் கூறி அதற்காக சிபாரிசுக் கடிதம் ஒன்றை கேட்டிருக்கிறார்.

அந்த நபர் பண்ருட்டியை அடுத்திருக்கும் தட்டாஞ்சாவடியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு அருகில் அமர்ந்து ஆறுதல் வார்த்தைகள் கூறியதுடன், சிபாரிசுக் கடிதத்தையும் கொடுத்து அனுப்பியிருக்கிறார் எம்.பி ரமேஷ்.

`மருத்துவர்கள் என் இறப்பை அறிவிக்கத் தயாரானார்கள்!’ - கொரோனா நினைவுகளைப் பகிரும் இங்கிலாந்து பிரதமர்
கொரோனா
கொரோனா

அந்தக் கடிதத்துடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார் அந்த மூதாட்டி. அங்கு அவருக்கு புற்றுநோய் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், அவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இதையடுத்து, அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அவரின் மகன் மற்றும் குடும்பத்தினரையும் தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், மூதாட்டியின் மகனின் டிராவல் ஹிஸ்ட்ரியை ஆய்வு செய்தனர்.

அப்போது அவர் கடலூர் எம்.பி டி.ஆர்.வி.எஸ் ரமேஷை சந்தித்தது தெரியவந்தது. அதையடுத்து அந்தத் தகவலை எம்.பி-க்கு தெரிவித்ததுடன், அவரது வீட்டில் நகராட்சி சார்பில் தனிமைப்படுத்தப்பட்டவர் என்ற ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டது. அதேபோல, அவரது கார் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் இருவரையும் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

தமிழகத்தில் பெட்ரோல் - டீசல் விலை உயர்கிறது! #NowAtVikatan

இதுதொடர்பாக எம்.பி டி.ஆர்.வி.எஸ் ரமேஷை அவரது செல்போனில் தொடர்புகொண்டோம். ``27-ம் தேதி எங்கிட்ட வந்த அந்த தம்பி அவங்க அம்மாவுக்கு புற்றுநோய் இருப்பதாகவும், அதனால ஜிப்மர் மருத்துவமனைக்கு கடிதம் வேணும்னு கேட்டார். அதன்படி அவருக்கு கடிதம் கொடுத்து அனுப்பினேன். அதன்பிறகு அந்த தம்பிக்கும், அவரது தாய்க்கும் கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். அதையடுத்துதான் நேற்று என்னை சந்தித்த மாவட்ட ஆட்சியர் தகவலைக் கூறியதுடன், தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். வேறு ஒன்றுமில்லை” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு