Published:Updated:

`என்னதான் நடக்கும்.. நடக்கட்டுமே’- அரசுப்பேருந்தை மறித்து டிக்டாக்; இளைஞரை கொத்தாக தூக்கிய போலீஸார்!

கடலூர் திட்டக்குடியை அடுத்த ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அஜீத்குமார். டிக்டாக் பிரியரான இவர் பல வீடியோக்களை டிக்டாக் செயலியில் பதிவிட்டுள்ளார்.

டிக்டாக் அஜீத்குமார்
டிக்டாக் அஜீத்குமார்

டிக்டாக் மோகம் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அதிகரித்துவந்த வண்ணம் உள்ளது. சினிமா வசனங்கள், பாடல்கள் என அனைத்தையும் டிக்டாக் வீடியோவாகப் பதிவு செய்து வருகின்றனர். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பாகுபாடு இல்லாமல் பெருகிவரும் இந்த மோகத்தால் சிலநேரங்களில் சில விநோதச் சம்பவங்களும் விபரீதங்களும் நடக்க தவறியதில்லை. அப்படி ஒரு சம்பவம்தான் கடலூரில் நடந்துள்ளது. கடலூர் திட்டக்குடியை அடுத்த ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அஜீத்குமார். டிக்டாக் பிரியரான இவர் பல வீடியோக்களை டிக்டாக் செயலியில் பதிவிட்டுள்ளார்.

அஜீத்குமார்
அஜீத்குமார்

சிறுவன் முன்னிலையில் மின் விசிறியில் தூக்கிட்டுக் கொள்வது, குடும்பத்தினர் உதவியுடன், பச்சிளம் குழந்தையைப் பாயில் படுக்க வைத்து, அதற்கு மேலே ஆபத்தை விளைவிக்கும் வகையில் கயிற்றில் விபரீதமாகத் தொங்குவது எனப் பல வீடியோக்களைப் பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் இதற்கு ஒருபடி மேலாக சமீபத்தில் ஆதனூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தை பைக்கில் மறித்து பின்னர் அந்த பைக்கின்மீது படுத்துக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 'என்னதான் நடக்கும்... நடக்கட்டுமே’ பாடலுக்கு டிக்டாக் வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வீடியோவைப் பதிவிட்ட சில மணிநேரங்களில் காட்சிகள் சமூக வலைதளங்களிலும், வாட்ஸ் அப்பிலும் வைரலானது. உடனே இதைப் பார்த்து மற்ற இளைஞர்களும் இதுபோல செய்யக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக கடலூர் காவல் கண்காணிப்பாளர் அபினவ் இளைஞர் அஜீத்தைப் பிடிக்க உத்தரவிட்டுள்ளார்.

அஜீத்குமார்
அஜீத்குமார்

அதன்பேரில் தன்னுடைய இரு சக்கரவாகனத்தில் டிக்டாக் செய்தபடியே, சுற்றிக்கொண்டிருந்த அஜீத்தை, அவருடைய பைக்குடன் போலீஸார் கைது செய்து அதிரடி காட்டியுள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இதற்கு முன்பும் அந்த இளைஞர் இதுபோல் விபரீத செயல்களில் ஈடுபட்டது தெரியவர அதிகமாக மக்களை கவர்வதற்காக டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட, அஜீத் மீது இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.