`தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்தச் சூழலில் கடந்த ஒரு வாரத்தில் வட மாநிலங்களிலும், சென்னை ஐஐடி-யிலும் மீண்டும் கொரோனோ பரவல் அதிகரித்துள்ளது. எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும்’ எனத் தமிழக முதல்வர் மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக மருத்துவத்துறைச் செயலாளர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ``தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன. மக்கள் அலட்சியமாக இருக்காமல், தமிழக அரசின் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். மேலும், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை. சென்னை ஐஐடி-யில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 111-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது’’ என்றார்.