மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரின் தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 10 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீலகிரி மாவட்டம், ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இந்தக் கொலை, கொள்ளையில் தொடர்பு இருப்பதாக சயான், வாளையார் மனோஜ் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜாமீனில் இருந்த இருவரையும் உடனடியாகக் கைதுசெய்து கோவைச் சிறையில் அடைத்தது காவல்துறை. பலத்த போலீஸ் பாதுகாப்புடனேயே அழைத்துவரப்பட்டு வழக்கு விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டனர். சயானுக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஊட்டி நீதிமன்றத்தில் மூன்று முறை மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மூன்று முறையும் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில்,சென்னை உயர் நீதிமன்றத்தில் சயான் தரப்பு வழக்கறிஞர்கள் மீண்டும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சயானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினர்.

ஜாமீன் குறித்து சயான் தரப்பு வழக்கறிஞர்கள், ``இரண்டு ஆண்டு போராட்டத்துக்குப் பின் சயானுக்கு தற்போது ஜாமீன் கிடைத்துள்ளது. இது எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய உரிமை. இந்த வழக்கு முடியும்வரை சயான் ஊட்டியில் இருக்க வேண்டும். அவருக்கு இரண்டு நபர்கள் ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்’’ என்றனர்.