Published:Updated:

`மருத்துவம் பார்க்கக்கூட பணமில்லை!'- தீக்குளித்த தாய், காப்பாற்ற முயன்ற மகளுக்கு நேர்ந்த சோகம்

சீர்காழி அரசு மருத்துவமனை
சீர்காழி அரசு மருத்துவமனை

நேற்று முன்தினம் ராஜேஸ்வரி வீட்டின் கொல்லைப் புறத்துக்குச் சென்று தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். அப்போது அவரின் அலறல் சத்தம் கேட்ட மகள் செல்வி, தாயைக் காப்பற்ற முயன்றுள்ளார்.

சீர்காழி அருகே குடும்ப வறுமையின் காரணமாகத் தாய் தீக்குளிக்க, அவரைக் காப்பாற்றச் சென்ற மகளும் தீயில் கருகி பலியான பரிதாபம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சீர்காழி  அரசு மருத்துவமனை
சீர்காழி அரசு மருத்துவமனை

நாகை மாவட்டம் சீர்காழி அருகே விளந்திடசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட சேந்தங்குடி கிராமம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். கூலித் தொழிலாளியான இவர் மனைவி செல்வி மற்றும் மாமியார் ராஜேஸ்வரி ( வயது 70) ஆகியோரோடுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சண்முகத்துக்கு போதிய அளவில் வேலை கிடைக்காததால் குறைவான வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

மாமியார் ராஜேஸ்வரிக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவத்துக்குப் போதிய பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜேஸ்வரி வீட்டின் கொல்லைப் புறத்துக்குச் சென்று தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். அப்போது அவரின் அலறல் சத்தம் கேட்ட மகள் செல்வி, தாயைக் காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது செல்வி மீதும் எதிர்பாராமல் தீப்பற்றிக் கொண்டது.

`மருத்துவம் பார்க்கக்கூட பணமில்லை!'- தீக்குளித்த தாய், காப்பாற்ற முயன்ற மகளுக்கு நேர்ந்த சோகம்

இவர்களின் மரண ஓலம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து உயிருக்குப் போராடிய ராஜேஸ்வரி, செல்வியை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டு வந்து சேர்த்தனர். இதில் ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே இறந்தது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. மேலும், உயிருக்குப் போராடிய செல்வியை மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி செல்வியும் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி சீர்காழி நகரப் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீக்குளித்து இறந்த இருவரின் உடலையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். வறுமையின் கொடுமையால் தாயும் மகளும் தீயில் கருகி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு