Published:Updated:

அம்மாவுடன் தினமும் சண்டை; அப்பாவுக்கு மகள் கொடுத்த விநோத தண்டனை!‍- பாராட்டு மழையில் மாணவி

``நீ எனக்கு என்ன வேணும்னாலும் தண்டனை கொடு. ஆனால், பேசாமல் மட்டும் இருக்காதே” எனக் கலங்கியிருக்கிறார்.

தந்தை சிவக்குமார்
தந்தை சிவக்குமார்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள மருதாவனம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், தன் தந்தை செய்த ஒரு தவற்றுக்கு விநோதமான தண்டனை கொடுத்துள்ளார். இதனால் ஊர் மக்களுக்கு நன்மை நடந்ததால், அந்தப் பள்ளி மாணவியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

குளத்தை சுத்தம் செய்யும் தந்தை
குளத்தை சுத்தம் செய்யும் தந்தை

மருதாவனத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு நதியா என்ற மகள் உள்ளார். கஜா புயலின்போது இவர்களது வீடு கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த சிவக்குமார், மது போதைக்கு அடிமையாகியுள்ளார். குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் சிவக்குமார், தன் மனைவியிடம் தகராறும் செய்துவந்துள்ளார். இதனால் வேதனையடைந்த, மகள் நதியா, தன் தந்தையிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். தன் மகளிடம் பாசமாக இருக்கும் சிவக்குமார், எவ்வளவு கெஞ்சிப் பார்த்தும்கூட, பல மாதங்களாக நதியா பேசவே இல்லை.

Vikatan

எப்படியும் தன் மகளை தன்னிடம் பேச வைத்துவிட வேண்டும் என முடிவெடுத்த சிவக்குமார், ``நீ எனக்கு என்ன வேணும்னாலும் தண்டனை கொடு. ஆனால், பேசாமல் மட்டும் இருக்காதே” என கலங்கியிருக்கிறார். அவருக்கு நதியா கொடுத்த தண்டனைதான் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. தான் படிக்கும் பள்ளியின் அருகில் உள்ள குளத்தில், ஆகாயத்தாமரையும் காட்டாமணக்கு செடியும் மண்டிக் கிடப்பதாகவும் அதை நீங்கள் சுத்தப்படுத்த வேண்டும். இதுதான் உங்களுக்குத் தண்டனை என நதியா கூறியுள்ளார்.

மாணவி நதியா
மாணவி நதியா

இதனால் அந்தக் குளத்தை உடனடியாக சுத்தப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் சிவக்குமார். மதிய உணவு அருந்தாமலே நாள் முழுவதும் குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டியுள்ளார் சிவக்குமார். தனது கணவர் படும் சிரமத்தைப் பொறுக்க முடியாமல், இவரின் மனைவியும் சேர்ந்து அந்தக் குளத்தைச் சுத்தப்படுத்தியுள்ளார். தவறு செய்த தன் தந்தைக்கு, விநோத தண்டனை அளித்த நதியாவுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.