Published:Updated:

``பென்ஷனுக்காக 8 ஆண்டுகளாக அலைக்கழிக்கிறார்கள்!” -கருணைக் கொலை செய்திட தியாகியின் மகள் மனு

தூத்துக்குடியில் தன் தந்தையின் தியாகி பென்ஷன் கிடைத்திட 8 ஆண்டுகளாக அலைக்கழிக்க வைக்கிறார்கள் அதிகாரிகள். அதனால், என்னைக் கருணைக்கொலை செய்திட அனுமதி அளிக்குமாறு தியாகியின் மகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இனாம்மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகரைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர், சுதந்திர போராட்ட தியாகி. சுதந்திரத்துக்கு பிந்தைய இந்தியாவில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மாடசாமிக்கு தியாகிகளுக்கான தாமிரப் பட்டயம் வழங்கப்பட்டது. மத்தியஅரசின் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான பென்ஷன் தொகையும் வழங்கப்பட்டு வந்தது. தியாகி மாடசாமிக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் இருந்தனர். இதில் கடைசி மகள் இந்திராவைத் தவிர மற்ற அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

மனு அளித்த தியாகி மகள் இந்திரா
மனு அளித்த தியாகி மகள் இந்திரா

இந்திராவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் திருமணமாகாமல் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2002-ம் ஆண்டு மாடசாமி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அவர் பெற்றுவந்த பென்ஷன் தொகை, அவரது மனைவி வள்ளியம்மாளுக்கு வழங்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 2013- ம் ஆண்டு வள்ளியம்மாளும் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். தியாயின் இறப்பிற்குப் பிறகு மனைவி அந்த பென்ஷனைப் பெறலாம். அதே சமயத்தில் திருமணமாகாத மகள் இருந்தால் அவரும் தந்தையின் பென்ஷனைப் பெற தகுதி உடையவராவார்.

இதன் அடிப்படையில், தந்தையின் பென்ஷன் தொகைக்காக இந்திரா விண்ணப்பித்தார். ஆனால், பல சான்றிதழ்கள், ஆவணங்களை மத்தியரசுத் தரப்பில் கேட்கப்ப்பட்டது. அனைத்து சான்றிதழ்களையும் இந்திரா, தனது மனுவுடன் இணைத்து நான்கு முறை அனுப்பினார். ஆனால், எந்தப் பதிலும் இல்லை. இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் நலச்சங்கத்தின் உதவியுடன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கினை விசாரித்த நீதிமன்றம், தியாகி மாடசாமியின் பென்ஷன் தொகையை இந்திராவிற்கு வழங்க உத்தரவிட்டது.

இந்திரா
இந்திரா

ஆனாலும் எந்தப் பலனுமில்லை. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதின விழா, குடியரசு தின விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க மட்டும் மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்து மரியாதை செய்து வருகிறது. ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் 8 ஆண்டுகளாகியும் இதுவரை பென்ஷன் கிடைத்திட எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், மனவேதனை அடைந்த அவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னை கருணைக்கொலை செய்ய அனுமதிக்கக்கோரி ஆட்சியர் செந்தில்ராஜிடம் மனு அளித்தார். பதறிப்போன ஆட்சியர் சமாதானம் சொல்லி அனுப்பியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து தியாகிகள் நலச்சங்கத்தின் கோவில்பட்டி வட்டாரச் செயலாளர் செல்வத்திடம் பேசினோம், “தியாகியின் வாரிசு என்கிற முறையில் சுதந்திர தினம், குடியரசு தின கொடியேற்ற நிகழ்ச்சிக்கு மட்டும் இந்திராவிற்கு அழைப்பு கொடுக்கும் அதிகாரிகள், ஏன் பென்சன் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை? இது தொடர்பாக தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்ட போது, தமிழக அரசிடம் இருந்து தங்களுக்கு இது தொடர்பாக எவ்வித கோப்பும் வரவில்லை என்று மத்திய அரசு பதில் கூறியுள்ளது. அடுத்தவேளை உணவுக்காக ஹோட்டலில் பாத்திரம் கழுவி வரும் தியாகியின் மகள் இந்த பென்ஷன் தொகையை மத்திய அரசிடம் கேட்டுப் பெற டெல்லிக்கு போக வேண்டுமா என்ற கேள்விதான் எழுகிறது.

தியாகி மாடசாமி
தியாகி மாடசாமி

சுதந்திர போராட்ட தியாகிகளின் பெண் குழந்தைகளுக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் அவர்களுக்கு தியாகிகள் பென்சனை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற விதி இருந்தும், நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு தியாகியின் மகள் இந்திராவிற்கு உதவித்தொகை தற்போது வரை வழங்கப்படாமல் உள்ளது.தேவையான அனைத்து ஆவணங்களும் கொடுத்த பிறகும் 6 மாதத்தில் முடிய வேண்டிய பணியை மத்திய, மாநில அரசுகள் 8 ஆண்டுகளாக இழுத்தடிப்பு செய்வது மன வேதனையை தருகிறது. விரக்தி அடைந்த அவர் வாழ விருப்பமற்று சாக முடிவெடுத்துவிட்டார்.

தியாகி எம்.ஏ.ஈஸ்வரன்: `அவர் செய்த செயல் இன்று 13 தொகுதிகளை காப்பாற்றுகிறது!'- நெகிழும் ஊர் மக்கள்

உயிர் துறக்க முடிவெடுத்தபின் தற்கொலை செய்து கொண்டால் தியாகியின் மகள் தற்கொலை செய்வது இந்த நாட்டிற்கு அவமானத்தை தேடித் தரும் என்பதால் தன்னை கருணை கொலை செய்யும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இந்த செயலை மிகவும் வேதனையாக பார்க்கிறோம். நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில் தியாகியின் மகளுக்கு பென்ஷன் தரும் அளவுக்கு கூட இந்த நாட்டில் சுதந்திரம் இல்லையா என்ற கேள்விதான் எழுகிறது. எனவே இந்திராவின் மனுவை பரிசீலித்து அவருக்கு உதவி தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்றார்.

இது குறித்து தியாகி மாடசாமியின் மகள் இந்திரா, ” என்னோட அப்பாவின் தந்தையின் பென்சன் தொகையைக் கேட்டு 8 வருஷமா அலைஞ்சுக்கிட்டிருக்கேன். அண்ணன், அக்கா இருந்தும் எனக்கு யாராலயும் உதவி இல்லை. பல முறை மனு கொடுத்தும், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

தியாகிகளின் வாரிசுகளுடன் இந்திரா
தியாகிகளின் வாரிசுகளுடன் இந்திரா

உடல்நிலை சரியில்லாததால், 7 மாசமா வீட்டுக்கு வாடகைகூட கொடுக்க முடியமால் இருக்கிறேன்” என்றார்.

மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் கேட்டோம், “தியாகி மாடசாமியின் மகள் இந்திராவின் பென்ஷன் குறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் அனுப்பப்பட வேண்டிய அனைத்து ஆவணங்களையும் மத்தியரசிற்கு அனுப்பியதுடன், அதன் தற்போதைய நிலை குறித்தும் விளக்கம் கேட்டுள்ளோம். அவருக்கு பென்ஷன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுதான் வருகிறது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு