Published:Updated:

நெய்வேலி: `தொடரும் விபத்துகள்; 5 கோடி அபராதம்!’ - தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

நெய்வேலி என்.எல்.சி நிறுவனம்
நெய்வேலி என்.எல்.சி நிறுவனம்

``என்.எல்.சி நிர்வாகம் இடைக்கால அபராதத் தொகையை இரண்டு வாரங்களுக்குள் கடலூர் மாவட்ட தலைமை நீதிபதியிடம் டெபாசிட் செய்ய வேண்டும்.”

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் ’நெய்வேலி நிலக்கரி நிறுவனம்’ இயங்கி வருகிறது. அனல்மின் நிலையம் – I மற்றும் விரிவாக்கம், அனல்மின் நிலையம் – II மற்றும் விரிவாக்கம், என்.என்.டி.பி என 5 அனல்மின் நிலையங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இதில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இரண்டாவது அனல்மின் நிலையத்தில் மட்டும் நாளொன்றுக்கு 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

நெய்வேலி என்.எல்.சி
நெய்வேலி என்.எல்.சி

தொடர் விபத்துகள்

7 யூனிட்டுகள் கொண்ட இந்தப் பிரிவில் சுமார் 3,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த மே மாதம் 7-ம் தேதி 6-வது யூனிட்டில் உள்ள கொதிகலனுக்குள் நிலக்கரியை அனுப்பும்போது பாய்லர் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட தீ விபத்தில் 8 தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில், 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பாதுகாப்பு விஷயத்தில் என்.எல்.சி நிர்வாகம் காட்டிய அலட்சியம்தான் தொழிலாளர்களின் உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று அப்போது குற்றம் சுமத்தின தொழிற்சங்கங்கள்.

பாதுகாப்பு துறை; நிலக்கரி துறைகளில் என்னென்ன சீர்திருத்தங்கள்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு விவரம்!

அதையடுத்து விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய இரண்டு குழுக்களை அமைத்ததாக அறிவித்தது என்.எல்.சி நிர்வாகம். அந்தச் சோகம் மறைவதற்கு முன்பே கடந்த 1-ம் தேதி மீண்டும் அதே இடத்தில் அதேபோன்று 5-வது யூனிட்டில் கொதிகலன் வெடித்துச் சிதறியதில் சம்பவ இடத்திலேயே பத்மநாபன் (28), அருண்குமார் (27), வெங்கடேசபெருமாள் (28), சிலம்பரசன் (28), ராமநாதன் (48), நாகராஜ் உள்ளிட்ட 6 பேர் உடல் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். அதையடுத்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.30 லட்சமும் வீட்டில் ஒருவருக்கு என்.எல்.சியில் நிரந்தர வேலை வாய்ப்பும் வழங்குவதாக என்.எல்.சி நிர்வாகம் அறிவித்தது. அதே நாளில் இரண்டாவது அனல்மின் நிலையத்தின் தலைமை மேலாளர் கோதண்டத்தைப் பணியிடை நீக்கம் செய்ததாகவும் நிர்வாகம் அறிவித்தது.

நெய்வேலி விபத்து
நெய்வேலி விபத்து

இந்த விபத்து குறித்து என்.டி.பி.சி.யின் ஓய்வு பெற்ற தொழில்நுட்ப இயக்குநர் மொகாபத்ரா தலைமையில் உயர் மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. அதேபோல என்.எல்.சியின் உள்கட்ட அமைப்புக்கள் குறித்து ஆய்வு செய்ய என்.எல்.சி மின்சார இயக்குநர் தலைமையில் மூத்த நிர்வாகிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால், விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே மத்திய நிலக்கரி அமைச்சகம் என்எல்சி-யின் மின்சார இயக்குநரைக் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த மற்ற 17 தொழிலாளர்களில் ஒருவர் என்.எல்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மற்ற 16 தொழிலாளர்கள் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் அடுத்தடுத்து 7 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த விவகாரத்தில், என்.எல்.சி நிறுவனம் இடைக்கால அபராதமாக ரூ. 5 கோடியை உடனே வழங்க வேண்டுமென்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும் அந்த உத்தரவில், ``என்.எல்.சி நிர்வாகம் இடைக்கால அபராதத் தொகையை இரண்டு வாரங்களுக்குள் கடலூர் மாவட்ட தலைமை நீதிபதியிடம் டெபாசிட் செய்ய வேண்டும். அந்தத் தொகையில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.30 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு ஒரு வாரத்துக்குள் ரூ. 5 லட்சமும், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்பட வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

தேசிய பசுமை தீர்ப்பாயம்!
தேசிய பசுமை தீர்ப்பாயம்!

மேலும் இந்த விபத்துக் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு ஒன்றையும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்து உத்தரவிட்டிருக்கிறது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கடலூர் மாவட்ட தலைமை நீதிபதி, சென்னை ஐ.ஐ.டி மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியாளர் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்தவர்களைக் கொண்ட அந்தக் குழு, 3 மாதங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது தீர்ப்பாயம்.

நெய்வேலி என்.எல்.சி: `மீண்டும் வெடித்த பாய்லர்’ -அதிகரிக்கும் பலி எண்ணிக்கை?
அடுத்த கட்டுரைக்கு