Published:Updated:

வேலூர்: `அவள் கண்கள் எதையோ சொல்லத் துடித்தது!’ - இளம்பெண்ணின் கடைசி நிமிட துயரம்

இளம்பெண் மாமுன் சடலம்
இளம்பெண் மாமுன் சடலம்

வாழ்க்கையே துயரமாகிய நிலையில் மரணத்தைத் தழுவியிருக்கிறார், வடமாநில இளம்பெண் மாமுன்.

பிப்ரவரி 22-ம் தேதி இரவு 9 மணிக்கு, காட்பாடி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் நிர்வாணமாக நடந்து சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஓர் இளம்பெண்ணைச் சமூக நலத்துறை அலுவலர்கள் மீட்டனர். உளவியல் ரீதியாக மன இறுக்கத்தில் இருந்த அந்தப் பெண்ணுக்கு உடை அணியச் செய்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அரியூரில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்தனர். பின்னரே அந்தப் பெண்ணின் பெயர் மாமுன். நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

இளம்பெண் மாமுன்
இளம்பெண் மாமுன்

‘‘மனநலம் பாதிக்கப்பட்டவர் கிடையாது. உளவியல் தாக்குதலில் நிலைகுலைந்து போய் ரயிலில் பயணித்துள்ளார். உடன் பயணித்த எவரோ பாலியல் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம்’’ என்று சமூக நலத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கடந்த மே மாதம் அந்தப் பெண் திடீரென மயங்கி விழுந்தார். வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் கட்டி (பிரெய்ன் டியூமர்) இருப்பது தெரியவந்தது. வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் உடனடியாக அறுவைசிகிச்சை செய்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவதற்கான மருத்துவ ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.

எனினும், ஆபத்தான கட்டத்தில் அந்தப் பெண் இருந்ததால், அறுவை சிகிச்சை செய்வது உயிருக்கே ஆபத்தாகக்கூட முடிந்துவிடும். இன்னும் சில தினங்களில் மரணம் நிச்சயம் என்று மருத்துவர்கள் நாள் குறித்தனர். மீண்டும் காப்பகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல்நிலை கவலைக் கிடமாக மாறியது. படுத்தப் படுக்கையாக இருந்த அந்தப் பெண்ணின் முதுகு பகுதி முழுவதும் புழு வைத்துவிட்டது. உடலின் தோற்றமும் மாறி வயதானவர் போல் முகம் சுருங்கிவிட்டது.

இளம்பெண் மாமுன் சடலம்
இளம்பெண் மாமுன் சடலம்

இந்தப் பெண்ணின் துயர நிலை குறித்து நேற்று முன்தினம் விகடனில் விரிவான செய்தியை வெளியிட்டிருந்தோம். இந்தச் சூழலில் அந்தப் பெண் இன்று மதியம் 1 மணி அளவில் திடீரென மரணமடைந்தார். பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி பிரியங்கா, சமூக பணியாளர் சங்கரி தலைமையிலான சமூக நலத்துறையினர் அந்தப் பெண்ணின் உடலை அரியூர் இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர்.

‘‘உறவுகளும் யார் என்று தெரியாத காரணத்தினால் மரணச் செய்தியைக்கூட யாரிடமும் தெரிவிக்க முடியவில்லை. உயிர் பிரிந்த கடைசி நிமிடம்கூட அந்தப் பெண்ணின் கண்கள் எதையோ சொல்லத் துடித்தன’’ என்கிறார்கள் சமூக நலத்துறை அலுவலர்கள். இந்தத் துயரச் சம்பவம் பலரையும் கண்கலங்கச் செய்திருக்கிறது.

வேலூர்: `சாகப்போகிறோம் என்று தெரியும், இருந்தாலும்...!’ - இளம்பெண்ணின் துயரம்
அடுத்த கட்டுரைக்கு