2004-ம் ஆண்டு கிறிஸ்துமஸின் மறு தினம் டிசம்பர் 26-ம் தேதியை தமிழக மக்களால் அவ்வளவு எளிதாக மறக்க இயலாது. அன்று கடலில் எழுந்த ஆழிப்பேரலை பல்லாயிரக்கணக்கானோரை உயிர்ப்பலி கொண்டும், உடைமைகளைப் பறித்தும் கபளீகரம் செய்தது. இப்போதுவரை அந்த பாதிப்பிலிருந்து பல குடும்பத்தினர் மீண்டுவர முடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலுள்ள கடல் பகுதியில் அதிகாலை வேளையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 9.1 முதல் 9.3 ரிக்டர் அளவுக்குப் பதிவானது. இதன் காரணமாக ஏற்பட்ட சுனாமியால் சுமார் 14 நாடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்தியாவில், குறிப்பாக தமிழகக் கடலோர மாவட்டங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் மட்டும் 10,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நாகப்பட்டினத்தில் மட்டும் 6,065 பேர் பலியானர்கள்.
இதில் கிறிஸ்மஸ் விழாவுக்காக வேளாங்கண்ணிக்கு வந்தவர்கள் 536 பேரும் அடக்கம்.
சுனாமி பாதிப்பு ஏற்பட்டு 18-து நினைவுநாளான இன்றும், மக்கள் மனதில் அந்தச் சோக வடு இன்னும் மறையவில்லை. பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சியினர், மீனவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கடலில் பாலை ஊற்றியும், பூக்களைத் தூவியும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
பல இடங்களிலுள்ள நினைவிடங்களில், மலர் வளையம் வைத்தும், மெழுகுவத்தி ஏற்றியும் இந்த நாளை கறுப்புதினமாக அனுசரித்துவருகின்றனர்.

நாகப்பட்டினம் மீனவர்கள் இன்று ஒரு நாள் கடலுக்குள் செல்லாமல் மாலை வரை உண்ணாநோன்பு இருந்து இறந்தோர்க்கு பிரார்த்தனை செய்வதை வழக்கமாகக்கொண்டிருக்கின்றனர். நாகை கலெக்டர் அலுவலகத்திலுள்ள சுனாமி நினைவு ஸ்தூபி மற்றும் கீச்சாங்குப்பம், கல்லாறு, அக்கரைப்பேட்டை, வேளாங்கண்ணி, செருதூர் உள்ளிட்ட இடங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.