Published:Updated:

`ஜனவரியில் பூத்த டிசம்பர் பூக்கள்!' - ஊட்டியில் உறைபனியைத் தாங்கி வளரும் குயின் ஆஃப் சைனா

டிசம்பர் பூக்கள்
டிசம்பர் பூக்கள்

இந்த மரம் முழுவதும் உள்ள கிளைகளில் மலர்கள் பூத்துக் குலுங்கும். பார்ப்பதற்கு மரமே வெள்ளை நிறம் கலந்த இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இந்த வகை மரங்கள் இந்தியாவில் அரிதாகவே காணப்படுகின்றன.

குளிந்த காலநிலையைக் கொண்ட நீலகிரிக்கு ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னர் பல்வேறு வகையான தாவரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றுள் பல அழகு தாவரங்களாகவும் பணப்பயிர்களாகவும் சில களைத் தாவரங்களாகவும் உள்ளன. இந்தத் தாவரங்களால் பொருளாதார ரீதியாக நன்மைகள் இருந்தாலும் சூழலியலில் தீங்கை ஏற்படுத்தி வருகின்றன.

டிசம்பர் பூக்கள்
டிசம்பர் பூக்கள்

இதேபோல ஆங்கிலேயர்களால் நிர்மாணிக்கப்பட்ட ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து கப்பல்கள் மூலம் மரக்கன்றுகள் வரவழைக்கப்பட்டு வளர்க்கப்பட்டன. இவற்றில் பல இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள பல்வேறு வகையான மரங்களில் சீனாவின் அரசி எனப்படும் (குயின் ஆஃப் சைனா) பவுலோனியா பார்சினி மலர்கள் சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகின்றன.

நீலகிரியில் உறைபனிப் பொழிவு வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் வரை நீடிக்கும். இந்தச் சமயங்களில் பெரும்பாலான மரங்கள் இலைகளை உதிர்த்து வறண்டு காணப்படும். ஒரு சில மரங்கள் மட்டுமே உறைபனியைத் தாங்கிப் பூக்கும். இந்த ஆண்டு உறைபனி தாமதமானதால் பூப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.

டிசம்பர் பூக்கள்
டிசம்பர் பூக்கள்

இந்த மரம் குறித்து அரசு பூங்கா ஊழியர்கள், ``சீனாவில் குளிர்காலத்தில் பூக்கும் பவுலோனியா பார்சினி என்ற வகை மலர்கள் சீனாவின் அரசி (குயின் ஆப் சைனா) என அழைக்கப்படுகிறது. இந்த வகை மலர்கள் மரங்களில் பூக்கும். இவை சீனாவில் அதிகளவு உள்ளன. குளிர் காலத்தில் (டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை) இந்த மரம் முழுவதும் உள்ள கிளைகளில் மலர்கள் பூத்துக் குலுங்கும். பார்ப்பதற்கு மரமே வெள்ளை நிறம் கலந்த இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இந்த வகை மரங்கள் இந்தியாவில் அரிதாகவே காணப்படுகிறது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஒரு மரம் மட்டுமே உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன் சீனாவிலிருந்து இந்த மரம் கொண்டுவரப்பட்டது. இந்த மரத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் மலர்கள் பூத்துக் குலுங்கும். ஆனால், இந்த முறை கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழை பெய்ததால், பனிப்பொழிவு குறைந்து காணப்பட்டது. இதனால், பனிக் காலத்தில் பூக்கும் இந்த மரங்களில் பூக்காமல் இருந்தது.

டிசம்பர் பூக்கள்
டிசம்பர் பூக்கள்

கடந்த மாதம் மரம் முழுவதும் மொட்டுக்களே காணப்பட்டன. ஒரு சில கிளைகளில் மட்டும் பூக்கள் பூக்கத் தொடங்கின. தற்போது மரம் முழுக்கப் பூக்கள் பூத்துள்ளன. மரங்களில் எங்கும் இலைகளின்றி மரம் முழுக்க இளஞ்சிவப்பு நிறம் கலந்த வெள்ளை நிற மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. தற்போது பூங்காவில் ஒரு சில செடிகளில் மட்டுமே பூக்கள் உள்ளன" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு