Published:Updated:

``தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆழ்துளை கிணறு!” - தொல்லியல் துறையிடம் விளக்கம் கேட்கும் நீதிமன்றம்

கு. ராமகிருஷ்ணன்
ம.அரவிந்த்

இதனால் பூமிக்கடியில் உள்ள மணல் பகுதியில் நெகிழ்வுத் தன்மை ஏற்பட்டு பெரிய கோயில் கோபுரம் உள்ளிட்ட கட்டுமானங்களுக்கு பாதிப்பு ஏற்படும்

பெரியகோயில்
பெரியகோயில் ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் பெரியகோயில் வளாகத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க, பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தஞ்சையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ஜீவக்குமார், இதற்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு தொல்லியல் துறை, தஞ்சாவூர் மாநகராட்சி உள்ளிட்டவற்றுக்கு உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் ஜீவக்குமார்
வழக்கறிஞர் ஜீவக்குமார்
ம.அரவிந்த்

2010-ம் ஆண்டு தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவின் போது, இதன் வளாகத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் பூமிக்கடியில் உள்ள மணல் பகுதியில் நெகிழ்வுத் தன்மை ஏற்பட்டு பெரிய கோயில் கட்டுமானம் மற்றும் கோபுரத்திற்கு பாதிப்பு ஏற்படும் எனத் தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு தடைவிதிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தடைவிதிக்கப்பட்டது. மரபுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை ஆழ்துளை கிணறு உள்ளிட்ட எவ்வித பணிகளும் நடைபெறக்கூடாது எனத் தொல்லியல் துறை சட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இதையெல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் தஞ்சை மாநகராட்சி சார்பில் இங்கு ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான பணி சமீபத்தில் நடைபெற்றது. இதை, உடனடியாக நிறுத்த வேண்டும் எனப் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இது தொடர்பாக தஞ்சை மாநகராட்சி ஆணையரைச் சந்தித்து தஞ்சை பெரியகோயில் உரிமை மீட்புக்குழுவினர் மனு அளித்த நிலையில் இப்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

பெரியகோயில்
பெரியகோயில்
ம.அரவிந்த்

இந்நிலையில் தஞ்சை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில்இது தொடர்பாக வழக்கறிஞர் ஜீவக்குமார் வழக்கு தொடர்ந்தார். இவரிடம் நாம் பேசியபோது ‘’பெரியகோயில் கோபுரத்துல இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் 500 அடி ஆழத்துல ஆழ்துளை கிணறு அமைச்சு தண்ணீர் எடுத்தால் எதிர்காலத்தில் கோயில் கடுமானம் கண்டிப்பாக பாதிக்கப்படும். பெரியகோயிலுக்கு வரக்கூடிய பொதுமக்களுக்கு தண்ணீர் தேவைப்பட்டால், டேங்கர் லாரி உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகள் மூலமாகத்தான் தண்ணீர் கொண்டு வரணும். ஆழ்துளை கிணறு அமைக்க, தொல்லியல் துறை எப்படி அனுமதி அளிச்சதுனு அதிர்ச்சியாக இருக்கு. நான் இப்ப தொடர்ந்துள்ள வழக்கை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆழ்துளை கிணறு அமைத்தால் பெரியகோயிலுக்கு பாதிப்பு வரும்னு தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு நல்லாவே தெரியும். அப்படியிருந்தும் ஏன் அவங்க இதுக்கு அனுமதிச்சாங்கனு புரியாத புதிராக இருக்கு. இதில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்” என்றார்.