Published:Updated:

ராமேஸ்வரம்: கடற்கரையில் உயிருக்குப் போராடிய இலங்கை முதிய தம்பதி; மீட்பதில் தாமதம் ஏற்பட்டது ஏன்?

மீட்புப்பணியில் கடலோர காவல் படை

கடற்கரையில் மயங்கிக்கிடந்த இலங்கையைச் சேர்ந்த முதிய தம்பதியை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது ஏன் என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்திருக்கிறார்.

ராமேஸ்வரம்: கடற்கரையில் உயிருக்குப் போராடிய இலங்கை முதிய தம்பதி; மீட்பதில் தாமதம் ஏற்பட்டது ஏன்?

கடற்கரையில் மயங்கிக்கிடந்த இலங்கையைச் சேர்ந்த முதிய தம்பதியை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது ஏன் என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
மீட்புப்பணியில் கடலோர காவல் படை

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அத்தியாவசியப் பொருள்களான அரிசி, பால், காய்கறி, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலை கிடுகிடு என உயர்ந்துவருகிறது. அதன் காரணமாக அந்த நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். நாளுக்கு நாள் அங்கு நிலைமை மோசமடைந்துவருவதால், இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள் அகதிகளாக அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு இடம்பெயர்ந்துவருகின்றனர்.

ஏற்கெனவே இலங்கையில் வாழ வழியின்றி 24 குடும்பங்களைச் சேர்ந்த 90 பேர் ராமேஸ்வரம் வழியாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்து, மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

முதிய தம்பதி
முதிய தம்பதி

இந்த நிலையில், அடையாளம் தெரியாத மர்மப் படகில் கடலில் ஆபத்தான முறையில் பயணம் செய்து, ராமேஸ்வரத்தை அடுத்த கோதண்டராமர் கடற்கரைத் தீவு மணல்திட்டில் உயிருக்குப் போராடிய நிலையில் வயதான தம்பதியர் தஞ்சமடைந்திருப்பதாக போலீஸாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மரைன் போலீஸார் மற்றும் க்யூ பிராஞ்ச் போலீஸார் மயக்க நிலையிலிருந்த முதிய தம்பதிக்கு தண்ணீர் கொடுத்து சுயநினைவுக்குக் கொண்டுவர முயன்றனர். பின்னர் அவர்கள் கொண்டுவந்திருந்த உடைமைகளைப் பரிசோதித்தபோது, அதில் காலாவதியான பாஸ்போர்ட் இருந்திருக்கிறது. அதன் மூலம் அவர்கள், இலங்கை திருகோணமலை பகுதியைச் சேர்ந்த பெரியண்ணா சிவன் (80), பரமேஸ்வரி எனத் தெரியவந்தது. பின்னர் மரைன் போலீஸார் ஹோவர் கிராஃப்ட் கப்பலுக்குத் தகவல் கொடுத்தனர்.

வயதான முதிய இலங்கைத் தம்பதி கடற்கரை மணலில் மயக்கமான நிலையில் இருந்ததையடுத்து, மரைன் போலீஸார் அகதிகள் கொண்டுவந்த சேலையைவைத்து அவர்கள்மீது நீண்ட நேரமாக, தங்களது கைகளால் பிடித்து வெயில் படாதவாறு பாதுகாத்தனர்.

ஹோவர் கிராஃப்ட் கப்பலில் மீட்கப்படும் முதிய தம்பதி
ஹோவர் கிராஃப்ட் கப்பலில் மீட்கப்படும் முதிய தம்பதி

பின்னர் கடலோரக் காவல் படையினரின் ஹோவர் கிராஃப்ட் மூலம் தம்பதியைப் பாதுகாப்பாக மீட்டு கடற்கரைக்குக் கொண்டுவந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டுசென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவரும், உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில், இலங்கை முதிய தம்பதியை மீட்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்துப் பல்வேறு குற்றச்சாட்டுகள் மீனவர்கள் தரப்பில் முன்வைக்கப்படுகின்றன.

இது குறித்து மரைன் போலீஸாரிடம் பேசினோம். ``எங்களுக்கு காலை 6 மணிக்குத் தகவல் வந்தது. சாலையிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து அவர்கள் இருந்த இடத்துக்குச் சென்றோம். அவர்கள் இருவரும் மயக்கநிலையில் இருந்தனர். அங்கிருந்து அவர்களை மீட்பது என்பது சாதாரணம் கிடையாது. அதனால் கடலோரக் காவல் படையினரின் ஹோவர் கிராஃப்ட் கப்பலை மீட்புப்பணிக்கு அழைத்தோம். அவர்கள் மத்திய அரசுக் கட்டுப்பாட்டில் இருப்பதால் மேலிடத்தில் அனுமதி பெற்றுவிட்டு வருவதாகக் கூறினர்.

சிகிச்சை பெற்றுவரும் முதிய தம்பதியைப் பார்த்த ஆட்சியர்
சிகிச்சை பெற்றுவரும் முதிய தம்பதியைப் பார்த்த ஆட்சியர்

அதுவரை அவர்களைக் கைவலிக்க சேலையைத் தூக்கிப் பிடித்து வெயில் படாதவாறு பாதுகாத்தோம். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தோம். அவர்கள் அங்கு வருவதற்கு சுமார் ஒன்றரை கிலோமீட்டர் முழங்கால் அளவு கடல் நீரில் நடந்துவர வேண்டியிருப்பதால், வர மறுப்பு தெரிவித்தனர். பின்னர் நாங்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக முதிய தம்பதி இருக்கும் இடத்துக்கு 108 மருத்துவ உதவியாளர், ஊழியர் வந்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

அப்போதுதான் அந்தப் பெண்ணுக்கு தலையின் பின்பக்கம் அடிபட்டிருப்பது எங்களுக்குத் தெரியவந்தது. முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு நீண்ட நேரமாகக் காத்திருந்த 108 ஊழியர்கள், `இதற்கு மேல் எங்களால் காத்திருக்க முடியாது, கப்பல் வந்தவுடன் ஆம்புலன்ஸுக்குக் கொண்டு வாருங்கள்!' எனக் கூறிவிட்டு சென்றுவிட்டனர். அதைத் தொடர்ந்து அனுமதி கிடைத்ததையடுத்து ஹோவர் கிராஃப்ட் கப்பல் மூலம் இருவரையும் மீட்டு, ஆம்புலன்ஸில் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.

கடலின் நடுவே மணல் திட்டில் இறக்கிவிடப்பட்டிருந்தால் எங்களிடம் உள்ள படகுகள் மூலம் மீட்டிருப்போம். ஆனால் அது சகதி நிறைந்த பகுதி, எங்களிடம் உள்ள கப்பலால் அங்கு செல்ல முடியாது. அதனால் ஹோவர் கிராஃப்ட் கப்பலால் மட்டுமே வர முடியும் என்ற காரணத்ஹால், அதுவரை காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. அதனால் ஏற்பட்ட தாமதம் இது. தவிர, அவர்களை எப்படியாவது காப்பாற்ற மரைன் போலீஸார் போராடினோம்" எனக் கூறினர்.

செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஆட்சியர்
செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஆட்சியர்

இது குறித்து அங்கிருந்த மீனவர்களிடம் பேசினோம். ``அவர்களை மீட்க வேண்டுமென்றால் எப்படி வேண்டுமானாலும் மீட்டிருக்கலாம். மரைன் போலீஸுக்குச் சொந்தமாக மூன்று அதிநவீன படகுகள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி மணல் பரப்பு இருந்த கடலில் சுற்றிவந்து அரிச்சல் முனை வழியாக அவர்களை மீட்டிருக்கலாம். வெயில் படாதவாறு சேலையை தூக்கிப் பிடித்து நின்றவர்கள், ஸ்ட்ரெச்சரில் கொஞ்சம் கொஞ்சமாகத் தூக்கிச் சென்றிருந்தால்கூட சுமார் இரண்டு மணி நேரத்தில் மீட்டிருக்கலாம்.

இருவரும் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. எங்களையும் அருகில் நெருங்கவிடவில்லை. தூரத்திலிருந்து பார்த்தபோது இருவரும் மூச்சுப் பேச்சு இல்லாமல்தான் இருந்தனர். முழங்கால் அளவு கடல்நீரில் எப்படி தூக்கிச் செல்ல முடியும் என அவர்கள் கூறும் காரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர்கள் உயிருக்கு ஏதாவது என்றால் அதற்கு போலீஸாரும் காரணம்" என ஆவேசமாகக் கூறினர்.

இந்த நிலையில் உயர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதிய தம்பதியை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் சந்தித்து மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து விசாரித்தார்.

மதுரைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட முதிய தம்பதி
மதுரைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட முதிய தம்பதி

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஆட்சியர், ``இருவரும் வயதில் மூத்தவர்கள். அதில் பரமேஸ்வரி என்ற முதிய பெண்னுக்குத் தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதே நிலையுடன் அவர்கள் மயக்கநிலையில் கிடந்ததால் மீட்புப் படையினரால் ஒன்றும் செய்ய முடியவில்லை எனக் கூறுகின்றனர்.

சாதாரண கப்பலில் அடிப்படை வசதிகள் இல்லை, அவர்களை கொண்டு வர முடியாது என மரைன் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்படும். கடலோர காவல்படை ஹோவர் கிராஃப்ட் கப்பல் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என இங்கிருக்கும் மருத்துவர்கள் தெரிவித்ததால், மதுரை அரசு மருத்துவமனைக்கு அனைத்து மருத்துவ வசதிகளுடன்கூடிய ஆம்புலன்ஸில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட இருக்கின்றனர். மேலும், மதுரை மாவட்ட ஆட்சியரிடமும் பேசி அவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்குமாறு கூறியிருக்கிறேன்" என்று தெரிவித்தார்.