Published:Updated:

கோவை சிம்ப்ளிசிட்டி இணையதள ஊடக உரிமையாளர் கைது..! - நடந்தது என்ன?

கோவை
கோவை

கோவையில் சிம்ப்ளிசிட்டி இணையதள ஊடக உரிமையாளர் கைது செய்யப்பட்டது தொடர்பான விரிவான கட்டுரை.

ஊரடங்கு கால கட்டத்திலும் பத்திரிகை ஊடகங்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிந்தாலும், அவர்கள் மீது ஒடுக்குமுறைகள் பாய்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கு உதாரணமாக கோவையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

கோவையைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கி வருகிறது சிம்ப்ளிசிட்டி என்ற இணையதள ஊடகம். கோவை தொடர்பான அனைத்துச் செய்திகளையும் வெளியிட்டு வரும் இந்த ஊடகத்தை ஆண்ட்ரூ சாம் ராஜா என்பவர் நடத்தி வருகிறார்.

கோவை
கோவை

இந்நிலையில், அந்த நிறுவனத்தைச் சேர்ந்த போட்டோகிராபர் பாலாஜி என்பவரை, கோவை வெரைட்டி ஹால் போலீஸார் விசாரணைக்காக அழைத்தனர். இந்தத் தகவலை அறிந்த கோவை பத்திரிகையாளர்கள் பலரும் வெரைட்டி ஹால் காவல்நிலையத்துக்கு விரைந்தனர். அங்கு சென்றிருந்த சிம்ப்ளிசிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த நிருபர் ஜெரால்ட் என்பவரிடமும் போலீஸார் விசாரணை செய்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் இருவரையும் ஆர்.எஸ்.புரம் பி-2 காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்

இதையடுத்து, கோவை பத்திரிகையாளர்கள் பலரும் ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம் முன்பு குவிந்தனர். இருவரையும் பிடித்து வைத்ததற்கான காரணத்தை மூத்த பத்திரிகையாளர்கள் கேட்டும் போலீஸார் காரணம் சொல்ல மறுத்துவிட்டனர். பத்திரிகையாளர்கள் சார்பாகவும் சிம்ப்ளிசிட்டி நிறுவனம் சார்பாகவும் வழக்கறிஞர்கள் வந்தபோதும், போலீஸார் உரிய காரணத்தைச் சொல்லவில்லை. மேலும், சிம்ப்ளிசிட்டி உரிமையாளர் ஆண்ட்ரூசாமை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர்.

காவல்நிலையத்தில் பத்திரிகையாளர்கள்
காவல்நிலையத்தில் பத்திரிகையாளர்கள்

அதற்குள் இந்தத் தகவல் காட்டுத் தீயாகப் பரவியது. எந்தக் காரணமும் சொல்லாமல் பத்திரிகையாளர்களைப் பிடித்து வைத்ததற்கு, மாநிலம் முழுவதுமிருந்து பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். அவர்களை விடுவிக்க வேண்டுமென்று கோவை மாநகரக் காவல்துறை ஆணையரிடம் பத்திரிகையாளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் ஆண்ட்ரூ சாம் காவல்நிலையத்துக்கு வந்தார்.

பின்னர், மூன்று பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு, இரவு 8 மணி அளவில் இரண்டு பத்திரிகையாளர்களையும் போலீஸார் விடுவித்தனர். அதேநேரத்தில், சிம்ப்ளிசிட்டி நிறுவனர் ஆண்ட்ரூ சாமைக் கைது செய்தனர்.

அதற்கான காரணம் குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, “கோவை மாநகராட்சி உதவி ஆணையர் சுந்தரராஜன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றனர்.

சிம்ப்ளிசிட்டி இணையதளத்தில், கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் முதுநிலை மாணவர்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்கப்படுவதில்லை என்று வெளியான செய்தியையும், மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய ரேஷன் பொருள்களை, ரேஷன்கடை ஊழியர்கள் திருடுவதாக வெளியான செய்தியையும் அடிப்படையாக வைத்து

ஆண்ட்ரூ சாம்
ஆண்ட்ரூ சாம்

தனது புகாரில் சுட்டிக்காட்டியுள்ள சுந்தரராஜன், இந்த இரண்டு செய்திகளும் அரசு ஊழியர்களை அரசுக்கு எதிராகப் போராடுவதற்குத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து ஆண்ட்ரூ சாம் மீது, அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் (IPC 188) மற்றும் பொதுமக்களை அரசுக்கு எதிராக தூண்டிவிடுதல் (IPC 505 (1) (b)) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஆண்ட்ரூ சாம் கைதுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

“சிம்ப்ளிசிட்டி நிறுவனம் அரசின் தவறுகளை தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகிறது. ஊரடங்கு காலகட்டத்தில் காவல்துறையில் நடந்த சில தவறுகள், உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு அடிப்படை வசதியே இல்லை, தூய்மைப் பணியாளர்களுக்கான பிரச்னை, அகதிகள் முகாம்களின் நிலவரம் என்று பல்வேறு செய்திகளை வெளியிட்டு வந்தனர்.

ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம்
ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம்

``அண்மையில், அமைச்சர் வேலுமணி தொடர்பாக, தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதனால்தான், அந்த நிறுவனம் மீது கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது. செய்தியில் தவறு என்றால், உரிய விளக்கம் கொடுக்கலாம். மானநஷ்ட வழக்கு தொடரலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு கைது நடவடிக்கை எடுப்பதன் மூலம், தங்களுக்கு எதிராகச் செயல்படக் கூடாது என்று பத்திரிகையாளர்கள் அனைவரையும் மிரட்டும் செயல் இது” என்று மூத்த பத்திரிகையாளர்களும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“அமைச்சர் வேலுமணிக்கு எதிராகப் போராடியதற்காகவும் கருத்து சொன்னதற்காகவும் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்ததற்காக பொதுமக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது, அவருக்கு எதிராக செய்தி வெளியிட்டதால் பத்திரிகையாளர்கள் மீதும் கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். தங்களது கையில் இருக்கும் அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஜனநாயகத்தை நசுக்கும் செயல் இது" எனக் கொதிக்கின்றனர் எதிர்க்கட்சி பிரமுகர்கள்.

பத்திரிகையாளர்கள் விடுதலை
பத்திரிகையாளர்கள் விடுதலை

இந்தப் புகாரைக் கொடுத்த கோவை மாநகராட்சி உதவி ஆணையர் சுந்தர்ராஜனைத் தொடர்புகொண்டோம். “அந்த ஊடகத்தில் இருந்த செய்தி தவறாகத் தெரிந்தது. அதனால் புகார் கொடுத்தேன். போலீஸ் விசாரணை நடந்துகொண்டிருப்பதால், இதைத் தவிர வேறு எதையும் நான் சொல்ல முடியாது” என்றார்.

பத்திரிகையாளர் கைது குறித்து, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியிடம் பேசினோம். “அப்படி ஒரு ஊடகம் இருப்பதே எனக்குத் தெரியாது. நேற்று சில பத்திரிகை நண்பர்கள் அழைத்து, ‘நீங்கள் சொல்லித்தான் இப்படி நடந்ததா?’ என்றனர். பிறகுதான் நான் விசாரித்தேன். கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு என்ற பெயரில் அவர்களுடைய கருத்துகளைச் செய்தியாக வெளியிட்டனர். மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் செய்து வருகிறோம்.

வேலுமணி
வேலுமணி

ஆனால், அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்குவதில்லை என்று செய்தி வெளியிட்டுள்ளனர். இப்படித் தொடர்ந்து பல செய்திகளை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக எங்கள் ஐ.டி விங் சார்பாக ஒரு புகார் கொடுக்கப்பட்டிருந்தது. அதை நான் நிறுத்தி வைக்கச் சொல்லிவிட்டேன்.

அதன்பிறகு மாநகராட்சி கொடுத்த புகார் பற்றி எனக்குத் தெரிந்தது. அது தவறான செய்தி என்றாலும், அவர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள் என்று நான்தான் போலீஸாருக்கு சொன்னேன். பத்திரிகை நண்பர்களுக்கு வீட்டு மனை வழங்குவது என்று பல்வேறு உதவிகளை நாங்கள் செய்துள்ளோம்.

இனிமேல், என்னுடைய கவனத்துக்கு வராமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறேன். தி.மு.க-வைச் சேர்ந்த சிலர் தவறான தகவல்களைக் கிளப்புகின்றனர். என்ன விஷயம் நடந்தாலும் அமைச்சர்தான் காரணம் என்று சொல்கின்றனர். ஆனால், அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இல்லை. என்னுடைய கவனத்துக்கு வரும்போது அதுபோன்ற விஷயங்களை நான் தவிர்க்கத்தான் பார்ப்பேன்” என்றார் உறுதியாக.

பத்திரிகையாளர்கள் போராட்டம்
பத்திரிகையாளர்கள் போராட்டம்

போலீஸாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து கோவை பத்திரிகை ஊடகவியலாளர்கள் வாயில் பூட்டு போட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு