Published:Updated:

`குழாயை அடைப்பது மட்டும் பிரச்னையல்ல!’ - சிறுவாணி அணை விவகாரத்தில் என்ன நடக்கிறது?

சிறுவாணி
சிறுவாணி

`தண்ணீர் மட்டம் வெகுவாகக் குறையும்போது, பழைய குழாய் மூலம் நமக்கு தண்ணீர் கிடைக்கும். அதை அடைப்பது நமக்கு ஒரு விதத்தில் பாதகம்தான். கேரளாவுக்கு அந்தத் தண்ணீரை அடைப்பதால் எந்தப் பலனும் இருப்பதாகத் தெரியவில்லை.'

கோவை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, ஆங்கிலேயர் காலத்தில் சிறுவாணி குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. 1929-ம் ஆண்டு இதற்காகச் சிறிய நீர்த் தேக்கம் அமைக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக கேரள அரசுகள் இணைந்து ஆய்வு நடத்தி 1973-ம் ஆண்டு புதிய அணை கட்ட ஒப்பந்தம் மேற்கொண்டன. 1984-ம் ஆண்டு சிறுவாணி அணை திறக்கப்பட்டது. தமிழகத்துக்கு தண்ணீர் கிடைத்தாலும், அணையின் முழு கட்டுப்பாடு கேரளா வசமே உள்ளது.

சிறுவாணி
சிறுவாணி

அணை பராமரிப்பு தொகையைத் தமிழகம் வழங்கி வருகிறது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகள் மற்றும் சாடிவயல் சுத்திகரிப்பு நிலையத்தை சுற்றியுள்ள 22 கிராமங்களுக்காகத் தினசரி 70 எம்.எல்.டி குடிநீர் எடுக்கப்படுகிறது. இந்நிலையில், சிறுவாணி அணையில் உள்ள பழைய குழாயை அடைக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பேசியபோது, ``அணையின் நீர்மட்டம் 7 அடியாகக் குறைந்து உள்ளதால் நான்கு குழாய்களில் மூன்றாவது குழாய் வெளியே தெரிகிறது. மேலும் அப்பகுதியிலிருந்து 200 மீட்டர் தொலைவில் நிரந்தர நீர் இருப்புப் பகுதியில் உள்ள பழைய குழாயைத் தமிழக அதிகாரிகளுக்குத் தெரியாமல் கேரள நீர்பாசன அதிகாரிகள் மூடி வருவதாகத் தகவல் வருகிறது. அந்த இடத்துக்கு நாங்கள் செல்ல முயல்கிறோம்.

கேரள அதிகாரிகள் செய்யும் பணி
கேரள அதிகாரிகள் செய்யும் பணி

ஆனால், கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகள் எங்களுக்கு அனுமதி மறுத்துவிட்டனர். சிறுவாணி அணையில் இருக்கும் அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டோம். அங்கும் சரியான பதில் கிடைக்கவில்லை. புதிய குழாய் மூலம்தான் தண்ணீர் வருகிறது. கோடைக்காலம், வறட்சி சமயங்களில் பழைய குழாயில் சேர்கிற தண்ணீரை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அந்தக் குழாயைத்தான் அவர்கள் மூடுவதாகத் தெரிகிறது. நேற்று, இன்று இல்லை. 2014-ம் ஆண்டில் இருந்தே கேரள அரசு அந்தக் குழாயை மூடுவதற்கு முயற்சி செய்து வருகிறது. சிறுவாணி அணையில் ஒவ்வோர் ஆண்டும் ஏதாவது பிரச்னை வந்து கொண்டே இருக்கிறார்கள். கடந்த ஆண்டு அணையில் இருந்து நீரை வெளியேற்றினர். இப்போது, குழாயை அடைக்கின்றனர். இருமாநில ஒப்பந்தத்துக்கும், அந்தக் குழாய்க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைதான்.

சிறுவாணி
சிறுவாணி

அதேநேரத்தில், வறட்சி காலகட்டத்தில் நமக்கு கை கொடுக்கும் அந்தக் குழாயை எந்த அறிவிப்பும் இல்லாமல் எதற்காக அடைக்க வேண்டும் என்று புரியவில்லை. இதுதொடர்பாக, எங்களின் மேல் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம்" என்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாகத் தந்தை பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க, நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ம.தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன், ``சிறுவாணியில் இருந்து தற்போது நமக்கு தண்ணீர் வருவது புதிய குழாய் மூலம்தான். கேரள அதிகாரிகள் மூடுவதாக சொல்லப்படுவது முன்பு பயன்படுத்திக்கொண்டிருந்த குழாய். இந்த பழைய குழாயானாது, புதிய குழாய்க்குக் கீழ் பகுதியில் அமைந்திருக்கும். தண்ணீர் மட்டம் வெகுவாகக் குறையும்போது, பழைய குழாய் மூலம் நமக்கு தண்ணீர் கிடைக்கும்.

ஈஸ்வரன்
ஈஸ்வரன்

அதை அடைப்பது நமக்கு ஒரு விதத்தில் பாதகம்தான். கேரளாவுக்கு அந்தத் தண்ணீரை அடைப்பதால் எந்தப்பலனும் இருப்பதாகத் தெரியவில்லை. விஷயம், பூதாகரமாகி வருவதால், இரு மாநில அரசும் இதுகுறித்து விரிவான விளக்கத்தை வெளியிட வேண்டும். ஊரடங்கு காலகட்டத்தில், இருமாநில பிரச்னை சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தில், அரசு நிர்வாகம் அமைதியாக இருப்பது சரியல்ல" என்றார்.

``இது அதிகாரிகள் அளவில் நடக்கும் காழ்ப்புணர்ச்சி போலதான் தெரிகிறது. தமிழகத்துக்கு பழைய குழாயில் தண்ணீர் வருவதை அங்கிருக்கும் சில அதிகாரிகள் விரும்பவில்லை. அதனால், தண்ணீர் எந்த வழியாகச் செல்கிறது என்பதை ட்ரேஸ் செய்து கொண்டிருக்கின்றனர். அது எளிதான காரியமல்ல. நம் அரசு, கேரளாவின் உயர் அதிகாரிகள் சிலரிடம் பேசினோலே பிரச்னை தீர்ந்துவிடும்.

சிறுவாணி
சிறுவாணி

எந்தப்பணியாக இருந்தாலும், அதை இருமாநில அரசாங்கமும் பரஸ்பரம் தகவல் தெரிவித்துவிட்டு தொடர்ந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. சிறுவாணி அணை மொத்தம் 50 அடி கொள்ளளவு பரப்பளவை கொண்டது. கடந்தாண்டு, வெள்ளத்தை காரணம் காடி, 45 அடிக்கு மேல் தண்ணீரின் அளவை அதிகரிக்க அவர்கள் அனுமதிக்கவில்லை.

சிறுவாணி அணை பாதுகாப்பாக இருந்தபோதும் அவர்கள் 45 அடிதான் தண்ணீர் என்பதில் உறுதியாக இருந்தனர். நம் முதல்வர் கடிதம் எழுதியும்கூட அவர்கள் தண்ணீரின் அளவை உயர்த்தவில்லை. ஒரு சில நாள்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிடும்.

சிறுவாணி
சிறுவாணி

நடப்பாண்டும் அணையை முழு கொள்ளளவை எட்ட விடாமல் செய்தால், நாம் அந்த 5 அடி தண்ணீரை மறக்க வேண்டிய சூழல் ஏற்படும். மேலும், அது பிற்காலத்தில் வேறுவிதமான பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, நடப்பாண்டு அணை முழு கொள்ளளவை எட்டுவதை இருமாநில அரசுகளும் உறுதிப்படுத்த வேண்டும்" என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ``சிறுவாணி அணையில் நமக்கு தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்ற தகவலில் உண்மை இல்லை. கோடைக்காலங்களில், கோவை மாநகராட்சிக்கு கிடைக்கப்பெறும் குடிநீர் அளவே தற்போதும் பெறப்பட்டு வருகிறது. ஜூன் மாத இறுதிவரை குடிநீர் தட்டுப்பாட்டில் எந்தத் தடங்கலும் இருக்காது. மேலும், அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் குடிநீர் விநியோகத்தில் எந்தப் பிரச்னையும் வராது" என்று கூறப்பட்டுள்ளது.

சிறுவாணி
சிறுவாணி

இதுதொடர்பாக கேரள அரசின் விளக்கத்தைப் பெற, பாலக்காடு மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை தொடர்பு கொண்டோம். அவரின் உதவியாளர்தான் பேசினார். ``சார் பிஸியாக இருக்கிறார் பிறகு கூப்பிடுங்கள்" என்ற பதிலே வந்தது. இதுகுறித்து, அவர்களது வாட்ஸ்அப்பிலும் மெஸேஜ் அனுப்பியுள்ளோம். ஆனால், அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

அடுத்த கட்டுரைக்கு