Published:Updated:

`ஊரடங்கில் பறிமுதல் செய்த வாகனங்களை ஒப்படைக்கிறோம்; ஆனால்?' - டி.ஜி.பி திரிபாதி அதிரடி #Lock down

ஊரடங்கில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள்
ஊரடங்கில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள்

ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றாமல் ஊரைச் சுற்றியவர்களின் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அவர்களின் வாகனங்களைத் திரும்ப ஒப்படைக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள், மாநில, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வாகனங்களில் ஊரைச் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

ஊரடங்கு
ஊரடங்கு
ஊரடங்கு முடிந்த பிறகுதான் வாகனங்கள் தரப்படும்... தமிழக டிஜிபி அலுவலகம் புதிய முடிவு!

ஊரடங்கு உத்தரவை மீறியதாக இன்று வரை 1,94,995 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2,08,139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1,79,827 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 89,23,644 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், ஊரடங்கிற்குப் பிறகு ஒப்படைக்கப்படும் என காவல்துறை தெரிவித்தது.

பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை ஒவ்வொரு காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது வாகனங்களைப் பாதுகாக்கவும் அதை நிறுத்துவதற்கான இடவசதியும் இல்லை. அதனால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க காவல்துறை முடிவு செய்தது. இதையடுத்து, தமிழக டி.ஜி.பி திரிபாதி இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

திரிபாதி
திரிபாதி

டி.ஜி.பி அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ``24.3.2020 முதல் ஊரடங்கு நடைமுறையின்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். வாகன உரிமையாளர்கள் தினமும் காலை 7 மணி முதல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்துக்கு ஒரு முறை 10 நபர்கள் என்ற நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும்.

தேவைப்படின் அதிகப்படியாக ஒரு மணி வரை வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும். இத்தருணத்தில் சமூக இடைவெளி அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் வழங்கப்படும். 24.3.2020 முதல் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட வரிசைப்படி வாகன உரிமையாளர்களுக்கு எந்த இடத்துக்கு வந்து வாகனங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தகவல் முன்னதாக அனுப்பப்படும்.

டிஜிபி உத்தரவு
டிஜிபி உத்தரவு

தகவல் பெற்றவர்கள் நேரில் வந்தவுடன் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வாகனங்கள் ஒப்படைக்கப்படும். வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான எப்.ஐ.ஆர் நகல், வாகன உரிமையாளர்களின் டிரைவிங் லைசென்ஸ் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ், வாகனத்தின் ஆர்.சி புக் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஆகியவற்றை வாகன உரிமையாளர்கள் கொண்டு வர வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

டி.ஜி.பி அலுவலகச் செய்திக் குறிப்பில், ஆர்.சி புக் ஜெராக்ஸ், லைசென்ஸ் ஜெராக்ஸ் ஆகியவை கொண்டுவர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக ஜெராக்ஸ் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. அதனால் வாகன உரிமையாளர்கள் ஜெராக்ஸ் எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால் ஜெராக்ஸ் கேட்கக் கூடாது என்று வாகன உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்

இதற்கிடையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற தகவல் வெளியானது. உடனடியாக வாகன உரிமையாளர்கள், பறிமுதல் செய்த வாகனகங்களைப் பெற ஆர்.சி புக், டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றுடன் காவல் நிலையங்களில் குவியத் தொடங்கினர்.

அவர்களிடம் போலீஸார், உங்களுக்குத் தகவல் வந்தபிறகு வாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் சாவிகளை போலீஸார் பத்திரமாக அந்தந்த காவல் நிலையங்களில் வைத்துள்ளனர். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் எந்தச் சாவி, எந்த வாகனத்துக்கு என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் காவல்துறையினர்.

அடுத்த கட்டுரைக்கு